சுரங்கப்பாதையில் சீரமைப்பு பணி நிறைவு, குந்தா அணையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்


சுரங்கப்பாதையில் சீரமைப்பு பணி நிறைவு, குந்தா அணையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்
x
தினத்தந்தி 18 Feb 2019 10:30 PM GMT (Updated: 18 Feb 2019 7:14 PM GMT)

சுரங்கப்பாதையில் சீரமைப்பு பணி நிறைவு பெற்றதால், குந்தா அணையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

மஞ்சூர்,

மஞ்சூர் அருகே உள்ள குந்தா பகுதியில் நீர்மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மின் உற்பத்திக்கு பிறகு வெளியேற்றப்படும் தண்ணீர் குந்தா அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த அணையில் உள்ள சுரங்கப்பாதை வழியாக கெத்தை நீர்மின் நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து மின் உற்பத்திக்கு பிறகு பரளி நீர்மின் நிலையத்துக்கு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அங்கும் மின் உற்பத்தி நடைபெறுகிறது.

இந்த நிலையில் குந்தா அணையில் உள்ள சுரங்கப்பாதையில் சேறு, சகதி மற்றும் கழிவுகள் தேங்கி அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இதனால் கெத்தை நீர்மின் நிலையத்துக்கு தண்ணீர் செல்வதில் சிக்கலாகிறது. மேலும் நீர்மின் நிலையத்தில் உள்ள எந்திரங்களும் பழுதாகி வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு குந்தா அணை சுரங்கப்பாதையில் அடைப்பு ஏற்பட்டதால், கெத்தை மற்றும் பரளி நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதையடுத்து சுரங்கப்பாதையை சீரமைக்க மின்வாரிய தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி குந்தா அணையில் இருந்து முற்றிலும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும் குந்தா நிலையத்திலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் தலைமையில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கப்பாதையை சீரமைக்கும் ஈடுபட்டனர். அப்போது தேங்கியிருந்த சேறு, சகதி மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டன. தற்போது சுரங்கப்பாதை சீரமைப்பு பணி நிறைவு பெற்றது.

இதையடுத்து நேற்று முன்தினம் குந்தா அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. பின்னர் நேற்று முதல் குந்தா, கெத்தை, பரளி நிலையங்களில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

சுரங்கப்பாதையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால், குந்தா அணையை முற்றிலும் தூர்வாரினால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Next Story