பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை: சிறுவனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை: சிறுவனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 19 Feb 2019 4:45 AM IST (Updated: 19 Feb 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

சேலம், 

சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந் தேதி மாயமானாள். சம்பவத்தன்று மாலை அவளுடைய தந்தை தெலுங்கனூர் பஸ் நிறுத்தத்தில் உள்ள ஒரு கடையில், அவளுக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்தார். ஆனால், சிறுமி வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன், அந்த சிறுமியை நைசாக பேசி அவனுடைய தாத்தா வீட்டிற்கு அழைத்துச்சென்றான். பின்னர் அங்கு வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான். அவள் சத்தம் போடவே வாயை பொத்தி பலாத்காரம் செய்தான். அதன்பின்னரும் அவள் வலியால் அலறினாள். இதனால் அந்த சிறுமியை அவன் தாக்கியதால் மயங்கி விட்டாள். உடனே அவளது கழுத்தை நெரித்து கொன்று விட்டான்.

இதைத்தொடர்ந்து சிறுமியின் உடலை பிளேடால் அறுத்துள்ளான். பின்னர் உடலை அருகில் இருந்த அலுமினிய அண்டாவில் திணித்து துணிகளை போட்டு மூடிவிட்டான். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் சிறுமியின் உடலை மீட்டனர். மேலும் சிறுமியை கொன்ற சிறுவனை கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

இந்த வழக்கு சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார். இதையடுத்து அந்த சிறுவன் செங்கல்பட்டுவில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்படுவான் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story