ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை கண்டறிந்து பட்டியல் வெளியிட வேண்டும் கலெக்டரிடம் மனு


ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை கண்டறிந்து பட்டியல் வெளியிட வேண்டும் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 18 Feb 2019 10:45 PM GMT (Updated: 18 Feb 2019 8:30 PM GMT)

ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கு தற்போது வறுமை கோட்டிற்கு கீழ் வாழுபவர்களை கண்டறிந்து பட்டியல் வெளியிட வேண்டும் என்று பெரம்பலூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி கிஸ்ஸான் சம்மான் நிதித்திட்ட பயனாளிகள் மற்றும் மாநில அரசின் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க கணக்கெடுத்தல் பணி நடைபெற்று வருகிறது.

இதில் நொச்சியம், வயலப்பாடி கீரனூர், மரவநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வறுமை கோட்டிற்கு மேல் உள்ள வசதி படைத்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

மேலும் தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த இந்த திட்டத்திற்கு புதுவாழ்வு திட்டத்தில் சேர்க்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு மட்டுமே நிதி வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. எனவே முன்பு கணக்கெடுத்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் படியும், தற்போது வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களை கண்டறிந்து தமிழக முதல்- அமைச்சர் அறிவித்த திட்டத்தில் அனைவரும் பயனடைய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதற்காக ஏராளமான பொதுமக்கள் நேற்று காலையிலேயே மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். மேலும் இது தொடர்பான மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் வெளியே உள்ள மரத்தடியில் பொதுமக்கள் அமர்ந்து எழுதி கொண்டிருந்தனர். இந்த மனுவினை கலெக்டரிடம் கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் பதிவு செய்தனர்.

வேப்பந்தட்டை தாலுகா முகம்மது பட்டினம், பிள்ளையார்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்களது கிராமங்களுக்கு அருகே உள்ள வெங்களத்தான் மலையில் சுமார் 8 கல்குவாரிகள் உள்ளது. தற்போது கல்குவாரிகளின் உரிமம் காலாவதியாகி விட்டதால் சில கல்குவாரிகளில் வெடி வெடிப்பதில்லை. இதில் 2 கல்குவாரிகளில் வெடி வெடிப்பது மட்டுமில்லாமல், அளவுக்கு மீறி வெடி மருந்திட்டு வெடிக்கிறார்கள். இதனால் அதனை சுற்றியுள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்படுகிறது. விளை நிலங்களில் கற்கள் விழுகிறது. இரவு நேரத்தில் கல்குவாரிகள் இயங்குவதால் எங்கள் கிராமங்களில் பொதுமக்கள் தூக்கமின்றியும், பள்ளி, கல்லூரிகள் படிக்கும் மாணவ- மாணவிகள் படிக்க முடியாமலும் உள்ளனர். எனவே இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நேரடி ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கல்குவாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என கூறியிருந்தனர்.

வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூரை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை கேட்டு மனு கொடுத்தனர்.

வேப்பந்தட்டை தாலுகா எறையூர் நரிக்குறவர் காலனி தெருவில் வசிக்கும் மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் காலனியில் 120 நரிக்குறவர்கள் வசித்து வருகிறார்கள். கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் செய்வதற்கு அதே பகுதியில் அரசு சார்பில் தலா 3 ஏக்கர் நிலம் எங்களுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்கான பட்டா வழங்கப்படவில்லை. இதில் நாங்கள் தற்போதும் விவசாயம் செய்து வருகிறோம். எனவே அந்த நிலத்திற்கான பட்டாவை எங்களுக்கு வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 358 மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து கூட்டத்தில் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “எனது வாக்கு, எனது உரிமை“ என்ற விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை செல்போனில் கலெக்டர் ஒட்டினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, தனித்துணை கலெக்டர் மனோகரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி மஞ்சுளா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் பாரதிதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story