ஆண்டிப்பட்டி பகுதியில் மின்மோட்டார் பழுதால் குடிநீர் வினியோகம் பாதிப்பு


ஆண்டிப்பட்டி பகுதியில் மின்மோட்டார் பழுதால் குடிநீர் வினியோகம் பாதிப்பு
x
தினத்தந்தி 19 Feb 2019 4:15 AM IST (Updated: 19 Feb 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

வைகைஅணை - ஆண்டிப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் மின்மோட்டார் பழுது ஏற்பட்டதால் ஆண்டிப்பட்டி பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் வைகை அணையில் இருந்து புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்த இந்த திட்டத்தின் மூலம் ஆண்டிப்பட்டி நகருக்கு ஒரு நாளைக்கு 25 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கூட்டுக்குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் 2 மின்மோட்டார்கள் மூலம் ஆண்டிப்பட்டிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஆண்டிப்பட்டி-வைகை அணை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஜம்புலிபுத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் செயல்பட்டு வந்த 2 மின்மோட்டார்களில் ஒரு மின்மோட்டார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதன்காரணமாக ஆண்டிப்பட்டி நகரில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தின்படி ஒரு நாளைக்கு 12 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மின்மோட்டார் பழுது காரணமாக 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யும் நிலை உள்ளது.

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால், பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்து, சீராக குடிநீர் வினியோகம் செய்ய ஆண்டிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story