‘பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க செயலில் இறங்குங்கள்’ மோடிக்கு சிவசேனா வலியுறுத்தல்

புலவாமா பயங்கரவாத தாக்குதலில் அரசியலை நுழைக்காமல் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க செயலில் இறங்குமாறு பிரதமர் மோடியை சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
மும்பை,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நீண்டகாலமாக இழுபறியில் இருந்த சிவசேனா, பா.ஜனதா கூட்டணி நேற்று உறுதியானது.
முன்னதாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில், பயங்கரவாத தற்கொலை படை தாக்குதலில் துணை ராணுவ படையினர் 40 பேர் கொல்லப்பட்டது குறித்து நேற்று மோடியை விமர்சித்து தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
இந்த தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல்
காஷ்மீர் தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கவும், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தவும் இதுவே சரியான நேரம். அதை விடுத்து எதிர்க்கட்சிகள் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தும் நேரம் இதுகிடையாது.
உலக நாடுகளில் இருந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்திவிட்டதாக இந்தியா கூறுகிறது. ஆனாலும் இந்திய மண்ணில் தொடர்ந்து பயங்கரவாதத்தை அந்நாடு விதைத்து வருகிறது.
நம்நாடு பலமுறை மக்களின் கோவத்தையும், அதன் விளைவாக பல அரசியல் மாற்றங்களையும் சந்தித்துவிட்டது. ஆனால் காஷ்மீர் பிரச்சினைக்கு யாரும் தீர்வு காணவில்லை. ராணுவ வீரர்கள் பலியாவதும் தடுத்து நிறுத்தப்படவில்லை.
உண்மையான சர்ஜிகல் ஸ்டிரைக்
2016-ம் ஆண்டு எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து உரி பகுதியில் பயங்கரவாதிகள் முகாம் மீது சர்ஜிகல் தாக்குதல் நடத்தியதை, பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டியதாக கூறி பெருமைப்பட்டு கொள்கிறார்கள்.
உண்மையான சர்ஜிகல் ஸ்டிரைக் என்பது பாகிஸ்தானுக்குள் புகுந்து அமெரிக்கா மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை அமெரிக்கா சுட்டுக்கொன்றது தான்.
விடுதலைப்புலிகளை அழித்து இலங்கை அரசு தங்கள் நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து விடுவித்துக்கொண்டது. நமது அரசும் இதேபோன்ற துணிச்சலை காட்டவேண்டும். பாகிஸ்தான் போன்ற 100 நாடுகளில் இந்தியாவால் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும். இந்த விவகாரத்தில் அரசியலை நுழைக்கும் நேரம் இது கிடையாது, நமது வீரர்களுக்கு பின்னால் உறுதியாக நிற்கவேண்டிய தருணம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story