தூத்துக்குடி அருகே 2 ஆயிரம் ஏக்கரில் தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள் விவசாயிகள் வேதனை


தூத்துக்குடி அருகே 2 ஆயிரம் ஏக்கரில் தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 18 Feb 2019 10:33 PM GMT (Updated: 18 Feb 2019 10:33 PM GMT)

தூத்துக்குடி அருகே 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகுவதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

ஸ்பிக்நகர்,

தூத்துக்குடி அருகே உள்ள பெட்டைக்குளம், கோரம்பள்ளம் குளத்தின் மூலம் கோரம்பள்ளம், பெரியநாயகிபுரம், காலாங்கரை, வீரநாயக்கன்தட்டு, குலையன்கரிசல், அத்திமரப்பட்டி, பொட்டல்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டு உள்ளனர். இங்கு நெல் நடவு முடிந்து கதிர்விடும் நிலையில் உள்ளன.இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் வடகாலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. ஆனால் குளங்களுக்கு தண்ணீர் வந்து சேர வில்லை. தற்போது குளங்களில் தண்ணீர் இல்லாததால் வயல்களுக்குதண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. வயல்கள் பாலம் பாலமாக வெடித்து கிடக்கின்றன. பயிர்கள் கருகும் நிலை உருவாகி உள்ளது.

இது குறித்து அத்திமரப்பட்டியை சேர்ந்த விவசாயி சுந்தர்சிங் (வயது 52) கூறியதாவது:-

பெட்டைக்குளம், கோரம்பள்ளம் குளம் பாசனத்தை நம்பி சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. இந்த நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து கதிர்விடும் நிலையில் உள்ளது. ஆனால் தற்போது 20 நாட்களுக்கு மேலாக தண்ணீர் இல்லாமல் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். ஆகையால் பயிர்களை பாதுகாக்க உடனடியாக அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறினார்.

Next Story