நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடர்ந்து நடத்தக்கோரி வழக்கு மத்திய– மாநில அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொடர்ந்து நடத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய–மாநில அதிகாரிகள் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மதுரை,
மதுரையை சேர்ந்த ஜான்சிராணி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், இந்தியாவில் போலியோ நோய் தாக்குதல் குழந்தைகள், சிறுவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. குழந்தை வயதில் ஒரு முறை போலியோ நோய் தாக்கிவிட்டால், அதில் இருந்து மரணம் அடையும் வரை தப்பிக்க முடியவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போலியோ நோய் பாதிப்பு இல்லாத நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் 1995–ம் ஆண்டில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வருடத்திற்கு குறைந்தது 3 முறை போலியோ சொட்டு மருந்தை 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவது வழக்கம். வருடத்திற்கு 3 முறை போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டும், நம் நாடு போலியோ பாதிப்பு இல்லாத நாடாக அறிவிக்கப்படவில்லை.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தான் போலியோ நோய் நம் நாட்டிற்கு பரவுகிறது. எனவே நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொடர்ந்து நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர், தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 25–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.