சிவகாசி பகுதியில் மாவட்ட அதிகாரி உரிமம் கொண்ட பட்டாசு ஆலைகள் இயங்க தொடங்கின தாசில்தார் தகவல்
விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட அதிகாரியின் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் இயங்க தொடங்கி இருப்பதாக தாசில்தார் தெரிவித்தார்.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் முழுவதும் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 13–ந்தேதி முதல் பட்டாசு ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்த ஒரு வழக்கில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு தயாரிக்க கூடாது, சர வெடிகள் தயாரிக்க கூடாது, பசுமை பட்டாசுகள் தான் தயாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறப்பட்டதால் பட்டாசு ஆலை அதிபர்கள் இந்த முடிவை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வந்த ஏராளமானவர்கள் திரண்டு போராட்டம் நடத்தி மாவட்ட நிர்வாகத்திடம் பட்டாசு ஆலைகளை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் சிவஞானம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
பட்டாசு ஆலைகளை திறந்து 40 சதவீத பட்டாசுகளை அதாவது பேரியம் நைட்ரேட் வேதிப்பொருள் இல்லாத பட்டாசுகளை தயாரிக்கலாம் என்று அறிவிப்பு செய்தார். இந்த அறிவிப்பானது பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆய்வு பிரிவு தனிதாசில்தார் மாரிமுத்து மூலம் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பை பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் பட்டாசு ஆலைகளை திறக்க உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்கவில்லை என்று அரசியல்கட்சிகள் குற்றம் சாட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தின. இதற்கிடையில் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை ஆகிய தாலுகாவில் உள்ள 150–க்கும் அதிகமான, மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆய்வு பிரிவு தனி தாசில்தார் மாரிமுத்து கூறினார். அவர் மேலும் கூறியதாவது:–
மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற 209 பட்டாசு ஆலைகளில் 150–க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் தற்போது பணிகளை தொடங்கி செயல்பட்டு வருகின்றன. சிவகாசி பகுதியில் மங்களம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள 20 பட்டாசு ஆலைகளில் தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மொத்தம் எத்தனை ஆலைகளில் பணிகள் நடக்கிறது என்று கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் கணக்கெடுக்கப்படும், என்றார்.
இதுகுறித்து மீனம்பட்டி சிறு பட்டாசு உற்பத்தியாளர் சங்க தலைவர் விநாயகமூர்த்தி கூறியதாவது:–
கலெக்டரின் வேண்டுகோளை ஏற்று நேற்று 150–க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டு உற்பத்தி தொடங்கியுள்ளது. அனைவரும் பணிக்கு வந்திருந்தனர். சரவெடி தயாரிப்புக்கு தடை இருப்பதால் மற்ற பணிகள் நடந்தன. சரவெடி தயாரிப்பு பணி செய்யும் தொழிலாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டது.
பட்டாசு ஆலைகளை உடனே திறப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே வரும் நாட்களில் கூடுதலான ஆலைகள் திறக்க வாய்ப்பு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். சாதகமான தீர்ப்பு வந்தால் முழு வீச்சில் உற்பத்தி நடைபெறும்.
இவ்வாறு கூறினார்.
மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற ஆலைகள் திறக்கப்பட்டு வரும் நிலையில், நாக்பூர் உரிமம் பெற்ற ஆலைகள் உள்பட மேலும் ஏராளமான ஆலைகள் திறக்கப்படவில்லை. அவர்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.