போலீசார்– வருவாய்த்துறையினர் பணிச்சுமையை குறைக்க தை மாதத்தில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்தலாமே? தமிழக அரசு பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு யோசனை
போலீசார், வருவாய்த்துறையினர் பணிச்சுமையை குறைக்க தை மாதத்தில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து பரிசீலித்து முடிவு செய்யுமாறு தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு யோசனை தெரிவித்துள்ளது.
மதுரை,
மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த வக்கீல் பாலமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை பழங்காநத்தம் ஊர்க்காவலன் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகிற 25–ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த வருடம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திய விழாக்குழுவினருக்கும், இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்த உள்ள விழாக்குழுவினருக்கும் இடையே சில பிரச்சினைகள் உள்ளன. எனவே சிறப்பு கமிட்டி அமைத்து பழங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்’’ என்று கூறி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘‘ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்திக்கொண்டே இருந்தால் காவல்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் வேறு பணிகள் இல்லையா?’’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
போலீசார், வருவாய்த்துறையினர் பணிச்சுமையை குறைக்க தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை தை மாதம் மட்டும் நடத்துவது பற்றி தமிழக அரசு பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என்று அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 20–ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.