கிரண்பெடியுடன் 4½ மணி நேரம் பேச்சுவார்த்தை தற்காலிகமாக போராட்டம் வாபஸ் -நாராயணசாமி அறிவிப்பு
கவர்னர் கிரண்பெடியுடன் நாராயணசாமி நேற்று மாலை 4½ மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.
புதுச்சேரி,
முன்னதாக கவர்னர் கிரண்பெடிக்கு நாராயணசாமி 36 மக்கள் பிரச்சினைகள் குறித்து தெரிவித்து அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இதற்கெல்லாம் பதில் அளிக்காமல் கடந்த 14-ந்தேதி கவர்னர் மாளிகையை விட்டு கிரண்பெடி காரில் புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்ற அவர் 21-ந் தேதி புதுவை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து இரவு பகலாக போராட்டம் நடத்திய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் முன்னதாகவே கவர்னர் கிரண்பெடி நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு திரும்பினார். மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் அழைப்பு விடுத்தார்.
ஆனால் இதில் பங்கேற்க நாராயணசாமி 3 நிபந்தனைகளை விதித்தார். அதை கவர்னர் ஏற்க மறுத்ததால் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இந்தநிலையில் திடீரென நிபந்தனைகளை தளர்த்திக் கொண்டதையொட்டி நாராயணசாமியை கவர்னர் கிரண்பெடி பேச்சுவார்த்தை நடத்த மீண்டும் அழைப்பு விடுத்தார்.
நேற்று மாலை 5 மணியளவில் கவர்னர் மாளிகைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், கந்தசாமி, ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் சென்றனர். அங்கு கவர்னர் கிரண்பெடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கவர்னரின் சிறப்பு பணி அதிகாரி தேவநீதிதாஸ், தலைமை செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் அரசு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
அங்கு பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவர்னர் கிரண்பெடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதன்பின் இரவு 9.30 மணியளவில் பேச்சுவார்த்தை முடிந்து சுமார் 4½ மணி நேரத்துக்கு பிறகு நாராயணசாமியும், அமைச்சர்களும் கவர்னர் மாளிகையை விட்டு வெளியே வந்தனர். அப்போது அவர்களிடம் அங்கிருந்த நிருபர்கள் பேச்சுவார்த்தை குறித்து விவரங்களை கேட்டனர். அதுபற்றி கூட்டணி கட்சியினருடன் பேசிய பிறகே தெரிவிக்க முடியும் என்று தெரிவித்து விட்டு அங்கிருந்து சட்டசபைக்கு நாராயணசாமி புறப்பட்டுச் சென்றார். அங்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தர்ணா போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டம் முடிந்தவுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசின் கோரிக்கைகள் தொடர்பாக கவர்னரிடம் 4½ மணி நேரம் பேசினோம். முதலில் ஏ.எப்.டி. மில் பிரச்சினை குறித்து பேசினோம். எங்களின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கவர்னர் கிரண்பெடி மில்லை மூடாமல் தொடர்ந்து நடத்திட பரிசீலனை செய்வதாக கூறினார்.
இதேபோல் இலவச அரிசி திட்டத்தின் அரிசியை தொடர்ந்து வழங்கவும் ஏற்றுக்கொண்டார். காவலர் பணிக்கு வயது வரம்பினை 24 ஆக உயர்த்தவும் உள்துறை மந்திரியிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். நிதி அதிகாரத்தை பொறுத்தவரை அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து ஏப்ரல் 1-ந் தேதி முதல் பகிர்ந்து அளிக்க பரிசீலனை செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
கூட்டுறவு சர்க்கரை ஆலையை ஏலம் விட்டு தொழிலாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய தொகையை தருவதற்கு ஒப்புக்கொண்டார். ஆசிரியர், நர்சுகள் நியமனத்திலும் தற்போது பிரச்சினை ஏற்படாத நிலை உள்ளது. அதிகாரங்கள் தொடர்பான பிரச்சினை குறித்து ஜகோர்ட்டில் வழக்கு இருப்பதால் தீர்ப்பின்படி நடந்துகொள்வது என முடிவு எடுக்கப்பட்டது. 10 ஆயிரம் பேருக்கு விதவை, முதியோர் ஓய்வூதியம் வழங்கவும் ஒப்புக்கொண்டார்.
எனவே கடந்த 6 நாட்களாக இரவு பகலாக நடந்து வந்த தர்ணா போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். மக்கள் மத்தியில் சென்று பிரச்சினைகளை முன்வைக்க ஏகமனதாக முடிவு செய்துள்ளோம். அரசு சார்பு நிறுவன தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதை கவர்னர் ஏற்றுக்கொள்ளவில்லை. வருகிற 22-ந் தேதி டெல்லியில் இதுதொடர்பாக கூட்டம் நடக்கிறது. அதில் தலைமை செயலாளர் கலந்துகொண்டு இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து கடந்த 6 நாட்களாக நடந்த தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது. நாராயணசாமி அறிவிப்பை கேட்டதும் கவர்னர் மாளிகை முன் போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
Related Tags :
Next Story