கொள்முதல் செய்ய வலியுறுத்தி நெல் மூட்டைகளின் மீது ஏறி நின்று விவசாயிகள் போராட்டம்


கொள்முதல் செய்ய வலியுறுத்தி நெல் மூட்டைகளின் மீது ஏறி நின்று விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2019 11:00 PM GMT (Updated: 19 Feb 2019 7:07 PM GMT)

மணல்மேடு அருகே கொள்முதல் செய்ய வலியுறுத்தி நெல் மூட்டைகளின் மீது ஏறி நின்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணல்மேடு,

நாகை மாவட்டம் மணல்மேடு அருகே வில்லியநல்லூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை மூட்டைகளாக கொண்டு வந்து கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைத்துள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த நெல் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதுகுறித்து கொள்முதல் நிலைய நிர்வாகத்திடம் கேட்ட போது நெல்லை பிடித்தம் செய்ய போதிய அளவு சாக்குகள் இல்லை என்று கூறுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் அதிக அளவில் தேக்கம் அடைந்துள்ளதால் மழை பெய்தால் மழைநீரில் நனைந்து சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று நெல்லை உடனே கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நெல் மூட்டைகள் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வெங்கட்ராமன் மற்றும் மணல்மேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நேரடி கொள்முதல் நிலையத்தில் உடனே நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story