தூத்துக்குடியில் திருநங்கை கொலையில் வாலிபர் கைது


தூத்துக்குடியில் திருநங்கை கொலையில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Feb 2019 11:00 PM GMT (Updated: 19 Feb 2019 8:20 PM GMT)

தூத்துக்குடியில் திருநங்கை கொலையில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கப்புரத்தை சேர்ந்தவர் ராஜாமான்சிங் என்ற ராசாத்தி (வயது 38). திருநங்கையான இவர் தாளமுத்துநகரில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் பூசாரியாகவும் கோவில் நிர்வாகத்தை கவனித்தும் வந்தார். இவருக்கும் அந்த கோவிலில் ஏற்கனவே பூசாரியாக இருந்த பூபால்ராயர்புரத்தை சேர்ந்த பாண்டி மகன் மருதுவிற்கும் (26) கோவில் பூஜை செய்வது, நிர்வாகத்தை கவனித்து கொள்வது தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி ராசாத்தியை மருது தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து, அரிவாளால் வெட்டி தலை துண்டித்து படுகொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட மருது, விளாத்திகுளம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு குற்றவாளியான தூத்துக்குடி பிரமுத்துவிளையை சேர்ந்த ஸ்டோன் மகன் ஸ்நோவின் (20) என்பவரை போலீசார் வேம்பார் காட்டு பகுதியில் வைத்து கைது செய்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் மருது, ராசாத்தி ஆகியோர் 3 தண்ணீர் லாரிகள் வைத்து தொழில் செய்து வந்தனர். அதில் 2 லாரிகள் ராசாத்தி பெயரிலும், ஒரு லாரி மருது பெயரிலும் இருந்தது தெரியவந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாரியை விற்று பணம் பிரிப்பதில் தகராறு இருந்து வந்ததாகவும், அதனால் கடந்த 4 மாதங்களாகவே அவர்கள் 2 பேருக்கும் தகராறு நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மருது, ராசாத்தியை கொலை செய்தது தெரியவந்தது. மருதுவிடம் விசாரணை நடத்திய பின்னரே கொலைக்கான முக்கிய காரணம் என்னவென்று தெரியவரும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Next Story