மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; கல்லூரி மாணவர் சாவு


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; கல்லூரி மாணவர் சாவு
x
தினத்தந்தி 19 Feb 2019 8:51 PM GMT (Updated: 19 Feb 2019 8:51 PM GMT)

பல்லாவரம் அருகே பெயிண்ட் ஏற்றிவந்த லாரி மோதியதில் மோட்டார்சைக்கிளில் வந்த கல்லூரி மாணவர் தலை நசுங்கி பரிதாபமாக பலியானார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த அனகாபுத்தூர் மேட்டுதெருவை சேர்ந்தவர் கவுரிசங்கர். இவரது மகன் பிரசன்னகுமார் (வயது 22). காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி.பயோகெமிஸ்டரி முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

பல்லாவரம் அருகே உள்ள நாகல்கேணி சாலையில் அவர் சென்று கொண்டிருந்த போது, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து நாகல்கேணியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு பெயிண்ட் ஏற்றி வந்த லாரியை முந்தி செல்ல முயன்றார்.

லாரி சக்கரத்தில் சிக்கினார்

அப்போது லாரி பிரசன்னகுமார் வந்த மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் லாரியின் பின் சக்கரம் பிரசன்ன குமாரின் மீது ஏறி இறங்கியது. அவர், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பண்ருட்டி அவியலூரைச் சேர்ந்த லாரி டிரைவர் ராஜேந்திரன் (33) என்பவரை கைது செய்தனர்.

Next Story