தோழி வீட்டில் கள்ளக்காதலனுடன் இருந்த இளம்பெண் கையும் களவுமாக பிடித்து கணவர் போலீசில் ஒப்படைத்ததால் பரபரப்பு


தோழி வீட்டில் கள்ளக்காதலனுடன் இருந்த இளம்பெண் கையும் களவுமாக பிடித்து கணவர் போலீசில் ஒப்படைத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Feb 2019 10:15 PM GMT (Updated: 2019-02-20T02:44:13+05:30)

ஆரல்வாய்மொழியில் தோழி வீட்டில் கள்ளக்காதலனுடன் இருந்த இளம்பெண்ணை, கணவரே கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பி.சி.காலனி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கு திருமணமாகி மனைவியுடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக அந்த ஆட்டோ டிரைவரின் மனைவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் ரகசிய தொடர்பு ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர்.

ஆட்டோ டிரைவர் தினமும் சவாரிக்கு சென்ற பிறகு, அவருடைய மனைவி அழகுக்கலை பயிற்சிக்கு செல்கிறேன் என்று கூறி விட்டு அந்த வாலிபருடன் எங்காவது வெளியூர் சென்று விடுவார். இப்படியாக அடிக்கடி ஆட்டோ டிரைவரின் மனைவி வாலிபருடன் சுற்றி வந்தார். இதனை ஆட்டோ டிரைவரின் உறவினர் ஒருவர் பார்த்து விட்டார். இதுதொடர்பாக கேட்ட போது தெரிந்த நபர் என்று கூறி சமாளித்து விட்டார். ஆனாலும் ஆட்டோ டிரைவருக்கு தன்னுடைய மனைவி மீது சந்தேகம் ஏற்பட தொடங்கியது. அவரது நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கினார்.

இதற்கிடையே ஆட்டோ டிரைவரின் மனைவியின் தோழி ஒருவரது வீடு செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ளது. அந்த வீட்டுக்கு 2 சாவிகள் உண்டு. ஒன்றை ஆட்டோ டிரைவரின் மனைவி வைத்திருந்தார். மற்றொன்றை அவருடைய தோழி வைத்திருந்தார். அந்த பெண் வேலைக்கு சென்ற பிறகு ஆட்டோ டிரைவரின் மனைவியும், அந்த வாலிபரும் அந்த வீட்டில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த விவரம் ஆட்டோ டிரைவருக்கு தெரிய வந்தது. மனைவியிடம் கேட்ட போது, கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் என்று வசனம் பேசி கணவரை நம்ப வைத்தார். ஆட்டோ டிரைவரும் மனைவி செய்யும் தவறை எப்படி கண்டுபிடிப்பது என்று யோசனை செய்தார். எப்படியாவது மனைவியை கையும், களவுமாக பிடிப்பது என்று முடிவு செய்தார்.

அந்த ஆட்டோ டிரைவர் செண்பகராமன்புதூர் செல்லும் போது தனது மனைவியின் தோழி வீட்டை கண்காணித்தபடி செல்வார். நேற்று அந்த வீட்டின் முன்பு ஒரு மோட்டார் சைக்கிள் நிற்பதை கண்டார். சந்தேகம் அடைந்த ஆட்டோ டிரைவர் வீட்டின் அருகில் சென்றார். காம்பவுண்டு சுவர் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.

அப்போது அந்த வழியாக வந்த ஆரல்வாய்மொழி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராபின்சனை வழிமறித்து ஆட்டோ டிரைவர் தன்னுடைய மனைவி பற்றிய விவரங்களை கூறினார். உடனே சப்-இன்ஸ்பெக்டர் ராபின்சன் அந்த வீட்டுக்கதவை தட்டினார். தன்னுடைய தோழிதான் வந்து விட்டாள் என நினைத்து ஆட்டோ டிரைவரின் மனைவி கதவை திறந்தார். அருகில் அவருடைய கள்ளக்காதலன் நின்று கொண்டிருந்தார். போலீசாருடன், தன்னுடைய கணவர் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே ஆட்டோ டிரைவரின் மனைவி, அவருடைய கள்ளக்காதலன் இருவரையும் போலீசார் ஆட்டோவில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து இருவரிடமும் விசாரணை நடத்தினர்.

தோழி வீட்டில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை, அவருடைய கணவரே கையும், களவுமாக பிடித்த சம்பவம் ஆரல்வாய்மொழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story