பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: சணல், துணி, காகித பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் கலெக்டர் கதிரவன் அறிவிப்பு


பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: சணல், துணி, காகித பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் கலெக்டர் கதிரவன் அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Feb 2019 4:00 AM IST (Updated: 20 Feb 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருப்பதால் சணல் பைகள், துணிப்பைகள், காகிதப்பைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் கதிரவன் அறிவித்து உள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தமிழக சட்டசபையில் கடந்த 5–6–2018 அன்று தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ், ஒரு முறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்தார். அதன்படி கடந்த ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை அமலுக்கு வந்தது.

மாநில அளவில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்து இருக்கிறது. இதில் பாலிப்புரப்லின் மற்றும் பாலிஎத்திலீன் ஆகியவற்றால் ஆன பிளாஸ்டிக் பைகளும் தடை செய்யப்பட்டதாக உள்ளது.

பாலிஎத்திலீன் பைகளை பொதுமக்கள் பரவலாக பயன்படுத்தி வந்ததால் அதன் இயல்புகளை நன்கு தெரிந்து இருந்தனர். ஆனால் பாலிப்புரப்லீன் வகை பைகளின் அமைப்பு, நிறம் ஆகியவையும், பார்ப்பதற்கு துணிப்பைகள் போன்றே இருக்கும். எனவே அவற்றை பொதுமக்கள் துணிப்பை என்று தவறாக நினைத்து பயன்படுத்தி வருகிறார்கள்.

பாலிப்புரப்லீன் என்பது நெய்யப்படாத பையாகும். இதில் உள்ள மூலக்கூறுகள் பாலிப்புரப்லீன் என்ற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த வகை பைகள் தடை செய்யப்பட்டவை. எனவே நெய்யப்படாத பாலிப்புரப்லீன் பைகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம்.

பிளாஸ்டிக் மாசில்லாத மாநிலம் என்று தமிழகம் தனது பயணத்தை தொடங்கி இருக்கிறது. எனவே நெய்யப்படாத வகையை சேர்ந்த பிளாஸ்டிக் பைகளை இனிப்பு கடைகள், மருந்து கடைகள், ஓட்டல்கள், துணிக்கடைகளில் பயன்படுத்த வேண்டாம்.

பாலிப்புரப்லீன் பைகளையும் துணிப்பைகள் என்று தவறாக நினைத்து பயன்படுத்த வேண்டாம். பாரம்பரிய சணல், துணி மற்றும் காகித பைகளை மட்டும் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.


Next Story