லஞ்ச வழக்கில் கைதான தலைமை ஆசிரியரை விடுவிக்க கோரி பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியல்


லஞ்ச வழக்கில் கைதான தலைமை ஆசிரியரை விடுவிக்க கோரி பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 Feb 2019 4:30 AM IST (Updated: 20 Feb 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமாரை விடுவித்து பணியில் அமர்த்த வலியுறுத்தி மாணவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போராட தூண்டியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

எலச்சிபாளையம்,

திருச்செங்கோட்டில் நாமக்கல் சாலையில் பச்சையம்மன் கோவில் அருகே அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பணிபுரிந்து வரும் சந்திரசேகர் என்பவருக்கு, அவரது 7 மாத சம்பள நிலுவையை பெற்றுத்தருவதாக கூறி, இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் நேற்று முன்தினம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது, கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் லஞ்சம் வாங்கியதாக கைதான தங்கள் தலைமை ஆசிரியரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்த பள்ளியின் மாணவ-மாணவிகள் நேற்று காலை திடீரென திருச்செங்கோடு-நாமக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளை அப்புறப்படுத்தினர். சுமார் 10 நிமிடமே இந்த சாலை மறியல் நடைபெற்றது.

இதனிடையே மாணவர்களை சாலை மறியல் செய்ய தூண்டியதாக கூறி, அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(வயது 27) என்பவரையும், செங்கோட்டையன் (45) என்பவரையும் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மாணவர்களின் திடீர் மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story