பிளாஸ்டிக் கைப்பைகளை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்


பிளாஸ்டிக் கைப்பைகளை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 19 Feb 2019 11:00 PM GMT (Updated: 19 Feb 2019 9:47 PM GMT)

பிளாஸ்டிக் கைப்பைகளை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருவண்ணாமலை,

தமிழகத்தில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாநில அளவிலான தடையை அரசு அறிவித்தது. அதில் பாலிப்புரப்பிலீன் மற்றும் பாலிஎத்திலீனாலான பிளாஸ்டிக் பைகளும் தடை செய்யப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் பாலி எத்திலீனாலான பிளாஸ்டிக் கைப்பைகளை பரவலாக பயன்படுத்தி வந்ததால் அதன் இயல்புகளை நன்று அறிந்தனர். அதே சமயத்தில் பாலிப்புரப்பிலீன் பைகளின் (நெய்யப்படாத கைப்பைகள்) அமைப்பு, வண்ணம் மற்றும் இயல்பு துணிப்பைகள் போலவே இருப்பதால் துணிப்பை என பொதுமக்கள் தவறாக புரிந்து கொண்டு உள்ளனர். மேலும் இந்த வகை நெய்யப்படாத பைகள், பாலிப்புரப்பிலீன் என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

எனவே, நெய்யப்படாத கைப்பைகளும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கைப்பைகளே ஆகும். இந்த புத்தாண்டில் தமிழகம் தனது பயணத்தை பிளாஸ்டிக் மாசில்லா மாநிலமாக தொடங்கப்பட்டு இருந்தாலும் இந்த வகை நெய்யப்படாத கைப்பைகள் இனிப்பங்காடி, மருந்தகம், உணவகம், துணிக்கடைகளில் துணிப்பைகள் என தவறாக கருதப்பட்டு பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் இதுபோன்ற பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் நெய்யப்படாத கைப்பைகளை தவிர்த்து பாரம்பரிய சணல், துணி மற்றும் காகித பைகளை உபயோகிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story