தமிழகத்தில் பா.ஜ.க. அமைத்திருப்பது கொள்கை இல்லாத கூட்டணி சஞ்சய் தத் பேச்சு


தமிழகத்தில் பா.ஜ.க. அமைத்திருப்பது கொள்கை இல்லாத கூட்டணி சஞ்சய் தத் பேச்சு
x
தினத்தந்தி 19 Feb 2019 11:00 PM GMT (Updated: 19 Feb 2019 9:57 PM GMT)

தமிழகத்தில் பா.ஜ.க. அமைத்து இருப்பது கொள்கை இல்லாத கூட்டணி என்று அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் கூறினார்.

திருச்சி,

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி மண்டல தேர்தல் ஆயத்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். செயல் தலைவர் விஷ்ணுபிரசாத், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜோசப் லூயிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

மத்தியில் நடைபெற்று வரும் ஒரு மோசமான ஆட்சியின் கையில் மக்கள் சிக்கி தவிக்கிறார்கள். மோடியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்து விட்டது. எப்படியும் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக இந்தியா முழுவதும் மோசமான கூட்டணியை மோடி ஏற்படுத்தி வருகிறார். மராட்டிய மாநிலத்தில் நேற்று வரை பாரதீய ஜனதாவை கடுமையாக விமர்சித்து வந்த சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து உள்ளனர்.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஊழல் ஆட்சி நடத்தி வருகிறது என பாரதீய ஜனதா தலைவர்கள் விமர்சனம் செய்தார்கள். இப்போது அந்த கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்தி இருக்கிறார்கள். சி.பி.ஐ., அமலாக்க துறைகளை வைத்து மிரட்டி சிறிய அளவிலான மாநில கட்சிகளை பாரதீய ஜனதா பணியவைத்து உள்ளது. அ.தி.மு.க.வை மிரட்டி கூட்டணி ஏற்படுத்தி இருக்கிறார்கள். அ.தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கவர்னரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வைப்பேன் என்று பேசிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், இப்போது அந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்து உள்ளார். எனவே தமிழகத்தில் அமைந்து இருப்பது கொள்கை, கோட்பாடு இல்லாத கூட்டணியாகும். கஜா புயலால் தமிழகம் பாதிக்கப்பட்ட போது பிரதமர் மோடி ஆறுதல் கூறுவதற்கு கூட வரவில்லை. ஆனால் நடிகர்களின் வீடு தேடி சென்று விழாக்களில் பங்கேற்றார். தமிழக மக்களின் வேதனைகளை அவர் மதிக்கவில்லை. ஆனால் தலைவர் ராகுல் காந்தி ஏழை மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

செயல் தலைவர் விஷ்ணு பிரசாத் பேசுகையில் ‘பா.ம.க. தலைவர் ராமதாஸ் எனது மாமா தான். அ.தி.மு.க.வுடன் அவர் 10 கோரிக்கைகளை வைத்து கூட்டணியில் சேர்ந்து இருப்பதாக கூறி உள்ளார். 11-வது கோரிக்கை என்ன என்பதை சொல்லவில்லை. கூட்டணிக்காக பேரம் நடந்து உள்ளது. குருவை சிறையில் அடைத்து அவர் சாவுக்கு காரணமாக இருந்தவர்களுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து உள்ளது. குரு ஆன்மா அவர்களை ஒரு போதும் மன்னிக்காது’ என்றார்.

கூட்டத்தில் செயல் தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார், மாநில துணை தலைவர் சுப.சோமு, புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் தலைவர் வெங்கடாசலம், திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கலை, பொருளாளர் நல்லசேகர் மற்றும் பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர் நன்றி கூறினார். 

Next Story