தஞ்சை அருகே பரிதாபம்: தீயில் கருகி 53 ஆடுகள் சாவு போலீசார் விசாரணை


தஞ்சை அருகே பரிதாபம்: தீயில் கருகி 53 ஆடுகள் சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Feb 2019 4:30 AM IST (Updated: 20 Feb 2019 10:19 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே தீயில் கருகி 53 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாலியமங்கலம்,

தஞ்சை அருகே உள்ள பூண்டி எடவாக்குடியை சேர்ந்தவர் மேகவர்ணன். இவருடைய மகன் காளீஸ்வரன்(வயது 27). இவர், பூண்டி வடக்கு பகுதியில் உள்ள ஒரு வயலில் மந்தை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இங்கு பிறந்து 40 நாட்களான 53 செம்மறி ஆட்டுக் குட்டிகளை அவர் பராமரித்து வந்தார்.

நேற்று முன்தினம் அவர் வழக்கம்போல் பெரிய ஆடுகளை மேய்க்க சென்றார். 53 ஆட்டுக்குட்டிகளும் அங்கு உள்ள பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அதே பகுதியில் உள்ள புதரில் திடீரென தீப்பிடித்தது.


இந்த தீ மள மளவென ஆட்டு மந்தை அமைக்கப்பட்டிருந்த வயலுக்கு பரவியது. அறுவடை முடிந்த அந்த வயலில் கிடந்த வைக்கோல் மீது தீப்பற்றியது. இதனால் ஆட்டு மந்தையும் தீப்பிடித்து எரிந்தது. பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 53 ஆட்டுக்குட்டிகளும், தப்பி ஓடுவதற்கு வழியின்றி தீயில் கருகி பரிதாபமாக இறந்தன.

இதுகுறித்து காளீஸ்வரன், அம்மாப்பேட்டை போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் பொன்.ஸ்ரீதரனிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இந்த சம்பவத்தில் புதரில் தீப்பிடித்தது எப்படி? யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீயில் கருகிய இறந்த ஆட்டுக்குட்டிகளுக்கு கால்நடை உதவி டாக்டர் செல்வராஜ் உடற்கூறு ஆய்வு செய்தார்.

தீயில் கருகி இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

தீயில் கருகி 53 ஆடுகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story