கோவையில் உள்ள நிதி நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி


கோவையில் உள்ள நிதி நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி
x
தினத்தந்தி 21 Feb 2019 4:15 AM IST (Updated: 21 Feb 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் உள்ள ஒரு நிதி நிறுவனம் அதிக வட்டிதருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர்.

கோவை,

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று காலை 50 பேர் வந்தனர். அவர்கள் போலீஸ் கமிஷனர் சுமித்சரணிடம் ஒரு புகார் மனு அளித்தனர். அதன்பின்னர் அவர்கள் கூறியதாவது:-

கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறப்பட்டது. ஒரு லட்சம் முதலீடு செய்தால் 3 மாதத்தில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் தருவதாக கூறினார்கள். அதை நம்பி கோவை, திருப்பூர். ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் கடந்த 2017-ம் ஆண்டு அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அந்த நிறுவனத்துக்கு சேலம், ஈரோட்டில் கிளை அலுவலகங்கள் உள்ளன. அந்த நிறுவனம் சார்பில் நகைக்கடை, விவசாய பண்ணை நடத்துவதாக கூறினார்கள்.

அந்த நிறுவனத்தில் குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை ஏராளமானவர்கள் முதலீடு செய்தனர். முதலீடு செய்யும் போதே 3 மாதம் கழித்து அசல் தொகையோடு 20 சதவீத வட்டித்தொகை தரப்படும் என்று கூறி ரசீது வழங்கினார்கள். அதன்பின்னர் ஒரு சில மாதங்கள் வட்டி கொடுத்தனர். பிறகு வட்டித்தொகையை திருப்பி தரவில்லை. அசல் தொகையையாவது திருப்பி கொடுங்கள் என்று கேட்டதற்கு அதையும் கொடுக்க மறுத்து விட்டனர். அந்த நிறுவனத்துக்கு சென்று பலமுறை பணம் கேட்டும் கிடைக்கவில்லை. விரைவில் கொடுத்து விடுகிறோம் என்று கூறி நிதி நிறுவனத்தினர் நாட்களை கடத்தினார்களே தவிர பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் அந்த நிறுவனத்துக்கு சென்றபோது அந்த நிறுவனம் பூட்டிக்கிடந்தது. அங்கு யாரும் இல்லை.

இந்த நிலையில் தான் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளோம். அதிக வட்டித்தருவதாக கூறி எங்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த நிதிநிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கோவை நிதி நிறுவனத்தில் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் வீதம் ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் முதலீடு செய்துள்ளதால் மோசடி செய்யப்பட்ட தொகை பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. சேமிப்பு, சொத்துகளை விற்று அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு மோசம் போனதாக ஏமாற்றம் அடைந்தவர்கள் கண்ணீர் மல்க கூறினார்கள்.

Next Story