அனைத்து விவசாயிகளுக்கும் உதவி தொகை வழங்ககோரி முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிடும் போராட்டம்


அனைத்து விவசாயிகளுக்கும் உதவி தொகை வழங்ககோரி முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிடும் போராட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2019 11:00 PM GMT (Updated: 20 Feb 2019 7:46 PM GMT)

அனைத்து விவசாயிகளுக்கும் உதவி தொகை வழங்க கோரி முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என திருச்சியில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மத்திய அரசு குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதாக அறிவித்து உள்ளது. இதனை குறு, சிறு என்ற பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கவேண்டும்,

அதேபோல் தமிழக அரசு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்து இருப்பதையும் மாற்றி அனைவருக்கும் வழங்க வேண்டும் என கோரி அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரம் சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் கதவணையை விரைவாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், படைப்புழுவினால் பாதிக் கப்பட்ட மக்காச்சோளத்திற்கு காலம் கடத்தாமல் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட விட்டுப்போன விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும், குடி மராமத்து பணிகள் சிறப்பாக நடைபெற மாவட்ட அளவில் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட குழுவினை அமைக்கவேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகிகள் ராமலிங்கம், சுந்தர்ராஜ், பெரியசாமி, அரவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். 

Next Story