டி.என்.பாளையம் அருகே மின்கசிவால் வீட்டில் தீ விபத்து; ரூ.3½ லட்சம் எரிந்து நாசம்


டி.என்.பாளையம் அருகே மின்கசிவால் வீட்டில் தீ விபத்து; ரூ.3½ லட்சம் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 20 Feb 2019 10:00 PM GMT (Updated: 20 Feb 2019 8:42 PM GMT)

டி.என்.பாளையம் அருகே மின்கசிவால் வீடு தீப்பிடித்து எரிந்ததோடு, அங்கிருந்த ரூ.3½ லட்சம் எரிந்து நாசம் ஆனது.

டி.என்.பாளையம்,

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் கள்ளிப்பட்டி அருகே உள்ள சைபன் புதூரை சேர்ந்தவர் பழனி (வயது 90). இவருடைய மனைவி கருப்பாயம்மாள் (75). இவர்களுடன் பேரன் ஜோதிலிங்கம் உள்பட 3 பேர் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்தப்பகுதியில் மின்வினியோகம் அடிக்கடி தடைப்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் வீட்டின் வெளியே அமர்ந்து இருந்தனர். அப்போது திடீரென வந்த மின்வினியோகத்தின் காரணமாக அந்த வீட்டில் மின்கசிவு ஏற்பட்டது. இதில் சிறிது நேரத்தில் மின்ஒயரில் தீப்பிடித்ததோடு, வீட்டிலும் தீ பரவியது.

இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்கு முயன்றனர். எனினும் அவர்களால் முடியவில்லை. அதனால் இதுகுறித்து உடனடியாக கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வீட்டில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. எனினும் வீட்டில் விவசாய கடனாக வாங்கி வைக்கப்பட்டு இருந்த 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் எரிந்து நாசம் ஆனது.

மேலும் வீட்டில் இருந்து அரிசி மூட்டைகள் உள்பட பல்வேறு பொருட்கள் தீயில் கருகின. இந்த விபத்தால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story