அரசு பொதுத்தேர்வு முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம்


அரசு பொதுத்தேர்வு முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 21 Feb 2019 4:15 AM IST (Updated: 21 Feb 2019 2:27 AM IST)
t-max-icont-min-icon

அரசு பொதுத்தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

விழுப்புரம்,

பிளஸ்-2 பொதுத் தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி தொடங்குகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த தேர்வை 299 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 20 ஆயிரத்து 68 மாணவர்களும், 21 ஆயிரத்து 3 மாணவிகளும் என மொத்தம் 41 ஆயிரத்து 71 பேர் 132 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர்.

மேலும் மார்ச் 6-ந் தேதி முதல் நடைபெற உள்ள பிளஸ்-1 தேர்வை 19 ஆயிரத்து 213 மாணவர்களும், 20 ஆயிரத்து 9 மாணவிகளும் என மொத்தம் 39 ஆயிரத்து 222 பேரும், 14-ந் தேதி முதல் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. பொதுதேர்வை 25 ஆயிரத்து 433 மாணவர்களும், 23 ஆயிரத்து 409 மாணவிகளும் என மொத்தம் 48 ஆயிரத்து 842 பேரும் எழுத உள்ளனர். இத்தேர்வு பணிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்து 80 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்த தேர்வையொட்டி முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி கல்வித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்வையொட்டி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்வர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாத வண்ணம் கண்காணிக்க வேண்டும்.

அனைத்து தேர்வு மையங்களுக்கும் காவல்துறையின் மூலம் பாதுகாப்பு வசதிகள் மற்றும் தேர்வு நாட்களில் தடையற்ற மின்சார வசதிகள், போக்குவரத்து வசதிகள் ஆகியவை ஏற்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி மற்றும் கல்வித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story