பாண்டவபுரா தாலுகாவில் சம்பவம் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் காரில் கடத்தி படுகொலை போலீஸ் விசாரணை


பாண்டவபுரா தாலுகாவில் சம்பவம் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் காரில் கடத்தி படுகொலை போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 20 Feb 2019 8:59 PM GMT (Updated: 20 Feb 2019 8:59 PM GMT)

பாண்டவபுரா தாலுகாவில் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் காரில் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மண்டியா,

மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா சிக்கடே கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மே கவுடா(வயது 50). இவர் சிக்கடே கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து வந்தார். இந்த நிலையில் வரதட்சணை கொடுமை தொடர்பாக இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. அதுதொடர்பான புகாரின்பேரில் அந்த நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் அந்த நபர்கள் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர். வெளியே வந்த அவர்கள் திம்மே கவுடாவை கொலை செய்ய திட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

காரில் கடத்தல்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் திம்மேகவுடா, அப்பகுதியில் உள்ள தேவிரம்மா கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். பூஜை முடிந்த பின்னர் அவர் கோவிலில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல், திம்மே கவுடாவை காரில் கடத்திச் சென்றனர். பின்னர் அவரை காரிலேயே வைத்து சரமாரியாக தாக்கினர். மேலும் அரிவாளாலும், கத்தியாலும் அவரை வெட்டினர்.

இதில் பலத்த ரத்தக்காயம் அடைந்த திம்மே கவுடா உயிருக்கு போராடினார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவரை, அந்த கும்பல் அப்பகுதியில் உள்ள ஏ.பி.எம்.சி. மார்க்கெட் வளாகம் அருகே வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

அதிர்ச்சி

இதைப்பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் சம்பவம் குறித்து திம்மே கவுடாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திம்மேகவுடாவின் மகன் வினாயக், உறவினர்கள் கவுதம், மகேஷ், திம்மேகவுடாவின் நண்பரும், ஏ.பி.எம்.சி. மார்க்கெட் சங்க உறுப்பினருமான சாமி கவுடா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் திம்மேகவுடாவை மீட்டு சிகிச்சைக்காக பாண்டவபுராவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே திம்மே கவுடா உயிரிழந்தார்.

கைது

பின்னர் இந்த கொலை சம்பவம் குறித்து பாண்டவபுரா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திம்மேகவுடாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் திம்மேகவுடாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்துள்ளனர். திம்மேகவுடாவை, ஜாமீனில் வெளியே வந்தவர்கள்தான் திட்டமிட்டு கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story