புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் 5 பேர் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை


புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் 5 பேர் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 22 Feb 2019 4:15 AM IST (Updated: 22 Feb 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டைவிசைப் படகு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் 180 விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஆனந்தவேல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த பிரவீன் (வயது 25), தாமோதரன் (31), சிங்கராஜ் (25), ராஜா (35), குமார் (30) ஆகிய 5 பேரும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 5 மீனவர்களையும் கைது செய்து, அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மீனவ சங்க நிர்வாகிகள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நம் இந்திய எல்லையில் மீன்பிடிக்கும்போதே அவர்கள் (இலங்கை) எல்லையில் மீன்பிடிப்பதாக கூறி கைது செய்கின்றனர். இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனே தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும். அப்போது தான் தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்க முடியும். மேலும் கைது செய்யப்பட்ட 5 மீனவர்களையும் உடனே விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story