குருபரப்பள்ளி அருகே 3 வீடுகளில் ரூ.1.33 லட்சம் நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
குருபரப்பள்ளி அருகே 3 வீடுகளில் ரூ.1.33 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குருபரப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே நடுசாலை கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி காயத்திரி (வயது 22). இவர் நேற்று முன்தினம் பூட்டை விட்டு, தனது நிலத்திற்கு சென்றார். மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்கம், வெள்ளி பொருட்கள் உள்பட ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
குருபரப்பள்ளியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி முனியம்மாள்(37). இவர் வீட்டை பூட்டி விட்டு, அதே பகுதியில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். மீண்டும் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகைகள் உள்பட ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
குந்தாரப்பள்ளி கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மனைவி கஸ்தூரி(42). இவர் வீட்டை பூட்டிவிட்டு அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றிருந்தார். மீண்டும் வந்த பார்த்த போது பீரோ உடைக்கபட்டிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்த மர்ம நபர்கள், வீட்டிற்கு நுழைந்து பீரோவை உடைத்து 11 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
ஒரே நாளில் குருபரப்பள்ளி, குந்தாரப்பள்ளி, நடுசாலை பகுதியில் 3 வீடுகளில் அடுத்தடுத்த மர்ம நபர்கள் கொள்ளையடித்து சம்பவம், அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொள்ளை தொடர்பாக குருபரப்பள்ளி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.