பொள்ளாச்சி அருகே கோலார்பட்டியில் தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து


பொள்ளாச்சி அருகே கோலார்பட்டியில் தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து
x
தினத்தந்தி 22 Feb 2019 11:00 PM GMT (Updated: 22 Feb 2019 7:34 PM GMT)

பொள்ளாச்சி அருகே கோலார்பட்டியில் தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டியை சேர்ந்தவர் தேவராஜ். இவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை கோலார்பட்டியில் உள்ளது.

இங்கிருந்து தென்னை நார் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் இங்கு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது காலை 11.45 மணிக்கு திடீரென்று தொழிற்சாலையில் பேக்கிங் பிரிவு பகுதியில் தீப்பிடிக்க தொடங் கியது.

சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி தொழிற்சாலை முழுவதும் எரியத் தொடங் கியது. இதனால் தொழிற்சாலையின் உள்ளே பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதை தொடர்ந்து உடுமலையில் மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி வேகப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் தொழிற்சாலைக்கு வெளியே தென்னை நாரில் பிடித்த தீயை பி.ஏ.பி. கால்வாயில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து பெண் தொழிலாளர்கள் அணைத்தனர்.

மேலும் தீயணைப்பு வாகனங்களில் உள்ள தண்ணீர் காலியானதால், தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டன. சுமார் 10 தண்ணீர் லாரிகளில் கொண்டு வரப்பட்ட தண்ணீரை கொண்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. சுமார் 5 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினரும், தொழிலாளர்களும் இணைந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து கோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறியதாவது:-

மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம். வெயில் சுட்டெரிப்பதால் தீ மளமளவென பரவி விட்டது. இதில் தென்னை நாரை உலர்த்தும் எந்திரம் உள்பட தொழிற்சாலைக்குள் எந்திரங்கள் தீயில் நாசமாகி விட்டது.

இதை தவிர தென்னை நார், தென்னை நார்கட்டி ஆகியவை முழுவதும் எரிந்து விட்டது. இந்த தீவிபத்தில் எந்திரங்கள் மற்றும் தென்னை நார் பொருட்கள் உள்பட சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தொழிற்சாலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எப்போதும் தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைத்து கொள்ள வேண்டும். அப்போது தான் தீ விபத்துக்களை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story