ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் கபடி போட்டி அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்


ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் கபடி போட்டி அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 23 Feb 2019 4:30 AM IST (Updated: 23 Feb 2019 2:52 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கபடி போட்டியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கபடி போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டி நேற்று தொடங்கியது. போட்டியானது 3 நாட்கள் நடக்கிறது. இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 150 ஆண்கள் அணியும், நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 7 பெண்கள் அணியும் கலந்து கொள்கின்றன. போட்டியில் ஆண்கள் அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.40 ஆயிரமும், 3-வது மற்றும் 4-வது பரிசாக ரூ.25 ஆயிரமும், பெண் அணிக்கு முதல் பரிசாக ரூ. 30 ஆயிரமும் 2-வது பரிசாக ரூ.20 ஆயிரமும், 3-வது மற்றும் 4-வது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

போட்டியின் தொடக்க நிகழ்ச்சி நேற்று மாலையில் தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மைதானத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், கழக அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், சின்னப்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். அவர் ஆண்களுக்கான போட்டியையும், சி.த.செல்லப்பாண்டியன் பெண்களுக்கான போட்டியையும் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் பழனிச்சாமி பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆண்கள் முதல் போட்டியில் தூத்துக்குடி கே.எம்.சி. அணியும் நாகலாபுரம் மனோன்மணியம் உறுப்பு கல்லூரி அணியும் மோதின. இதில் தூத்துக்குடி கே.எம்.சி. அணி 29 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் வல்லநாடு வி.டி.வி.டி. அணியும், குளத்தூர் டி.எம்.எம். கலை கல்லூரி அணியும் மோதியது. இதில் குளத்தூர் டி.எம்.எம். கலை கல்லூரி அணி 25 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது.

பெண்கள் போட்டியில் தூத்துக்குடி ஐ.பி.எம்.எஸ். அணியும், நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தை சேர்ந்த பாரத் 7 என்ற அணியும் மோதின. இதில் தூத்துக்குடி ஐ.பி.எம்.எஸ். அணி 25 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றன.

இந்த போட்டியை பொதுமக்கள் காண்பதற்கு வசதியாக இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு போட்டியை கண்டி ரசித்தனர்.

Next Story