அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரி மாணவர்கள் சாலை மறியல்


அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரி மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 24 Feb 2019 3:45 AM IST (Updated: 24 Feb 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைசேரியில் உள்ள அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைசேரியில் அரசு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மேலும் கஜா புயலில் சேதம் அடைந்த கல்லூரியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை கண்டித்தும், கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரியும் மாணவர்கள், கல்லூரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ஜெயந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாபன், வருவாய் ஆய்வாளர் பெத்தராஜ் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக திருத்துறைப்பூண்டி-திருவாரூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story