அரியலூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்


அரியலூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 23 Feb 2019 11:00 PM GMT (Updated: 23 Feb 2019 8:34 PM GMT)

அரியலூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடந்தது.

அரியலூர்,

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2019-ஐ முன்னிட்டு பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் தகவல் திட்டம்-2019 என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மாதம் 31-ந் தேதி வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் தமது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதினை வாக்காளர்கள் சரிபார்த்துக்கொள்வதற்காக சிறப்பு முகாம்கள் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நேற்று நடந்தது.

இந்த முகாமில் கடந்த மாதம் 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்ய, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவம்-6-ஐ அளித்தனர். மேலும் பெயர் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான படிவங்களை அளித்து திருத்தம் செய்தனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்டவை செய்வதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் ரெட்டிபாளையம், புது பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடந்த சிறப்பு முகாமினை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த சிறப்பு முகாம்கள் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் இயங்கும் அரசு இ-சேவை மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை கோரி வாக்காளர்கள் படிவம் எண் 1 பூர்த்தி செய்தும், மேற்படி படிவத்தில் துணை தாசில்தார் (தேர்தல்) நிலையில் உள்ள அலுவலரிடம் கையொப்பம் பெற்றும், வாக்காளர் அடையாள அட்டைக்கான ரூ.25-ஐ கட்டணமாக செலுத்தியும் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம் என்று பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

Next Story