தாளவாடி அருகே பயங்கர தீவிபத்து: 30 ஏக்கர் விவசாய தோட்டம் எரிந்து நாசம் 20 ஏக்கர் மானாவாரி நிலமும் கருகியது
தாளவாடி அருகே ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 30 ஏக்கர் விவசாய தோட்டம் எரிந்து நாசமானது. மேலும் 20 ஏக்கர் பரப்பளவில் மானாவாரி நிலமும் கருகியது.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள அருள்வாடியை சேர்ந்தவர்கள் சிவராம், பாலாஜி. இவர்கள் இருவருக்கும் சொந்தமான 30 ஏக்கர் தோட்டம் அந்த பகுதியில் உள்ளது. இதில் தென்னை, பாக்கு மற்றும் பப்பாளி மரங்கள் வளர்த்து வருகிறார்கள். சொட்டுநீர் பாசனம் அமைத்து மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தனர்.
கடந்த சில நாட்களாக தாளவாடி பகுதியில் மழை பெய்யாததால் மரங்களின் கீழே தரைப்பகுதியில் இருக்கும் கோரைப்புற்கள் காய்ந்து கிடந்தன.
இந்தநிலையில் நேற்று மதியம் தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. கோரைப்புற்கள் காய்ந்து கிடந்ததால் தீ மளமளவென பரவி 30 ஏக்கர் முழுவதும் பற்றி எரிந்தது.
மேலும் தீ அருகே இருந்த மானாவாரி நிலங்களில் உள்ள கோரைப்புற்களிலும் பற்றிக்கொண்டது. சிறிது நேரத்தில் சுமார் 20 ஏக்கர் சுற்றுளவுக்கு தீ சூழ்ந்துகொண்டு எரிந்தது.
உடனே இதுபற்றி ஆசனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 2½ மணி நேரம் போராடி தீயை அணைத்தார்கள்.
இந்த தீ விபத்தில் சிவராம் மற்றும் பாலாஜிக்கு சொந்தமான தோட்டத்தில் பப்பாளி மரங்கள், உயரம் குறைவாக இருந்த 10 தென்னை மரங்கள், சொட்டுநீர் பாசன குழாய்கள், மின்மோட்டார் கேபிள்கள் அனைத்தும் எரிந்து நாசமாகிவிட்டன.
தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்று தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் தாளவாடி அருகே தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் உள்ள மூக்கன்பாளையம் என்ற இடத்தில் நேற்று முன்தினம் முதல் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிகிறது. மலையில் உச்சியில் தீ பற்றி எரிந்ததால் வனத்துறையினரால் தீயை அணைக்க முடியவில்லை. மேலும் கடந்த ஒரு வாரமாக தாளவாடி பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் தொடர்ந்து 2 நாட்களாக தீ கொழுந்துவிட்டு எரிகிறது. மலையின் அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் புகைமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமாகின்றன. தீ எரியும் பகுதியில் உள்ள விலங்குகள் இடம் பெயர்ந்து விட்டனவா? அல்லது தீயில் சிக்கி உயிரிழந்தனவா? என்று தெரியவில்லை.
இந்தநிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட இக்கலூர் வனப்பகுதியில் நேற்று மாலை காட்டுத்தீ பற்றி எரிகிறது.
வனவிலங்குகளையும், அரியவகை மரம், செடிகளையும் காப்பாற்ற உடனே காட்டுத்தீயை அணைக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.