காட்டுயானைகளை பாதுகாக்க வலியுறுத்தி ஊட்டியில் கஜ யாத்திரை


காட்டுயானைகளை பாதுகாக்க வலியுறுத்தி ஊட்டியில் கஜ யாத்திரை
x
தினத்தந்தி 24 Feb 2019 4:30 AM IST (Updated: 24 Feb 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

காட்டுயானைகளை பாதுகாக்க வலியுறுத்தி ஊட்டியில் கஜ யாத்திரை தொடங்கியது.

ஊட்டி,

இந்திய யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வனத்துறை சார்பில் காட்டுயானைகளை பாதுகாக்க வலியுறுத்தி கஜ யாத்திரை ஊட்டியில் நேற்று தொடங்கியது. கஜ யாத்திரையை நீலகிரி மாவட்ட வன அதிகாரி சுமேஷ் சோமன் தொடங்கி வைத்தார். ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ராஜீவ்காந்தி ரவுண்டானா, லோயர் பஜார், மாரியம்மன் கோவில் சந்திப்பு, காபிஹவுஸ், மணிக்கூண்டு வழியாக ஏ.டி.சி. திடல் வரை யாத்திரை சென்றது.

இந்த யாத்திரையில் 3 யானைகள் உருவம் கொண்ட பொம்மைகள் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. அதன் பின்னர் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவ–மாணவிகள், வன ஆர்வலர்கள் காட்டுயானைகளை பாதுகாக்க வலியுறுத்தி பதாகைகளை கையில் ஏந்தியும், யானை உருவம் போன்ற முகமூடிகள் அணிந்தும் சென்றனர். மேலும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் முக்கிய இடங்களில் யானைகள் நலன் காக்க தப்பாட்டம் அடித்து வீதி நாடகம் நடத்தப்பட்டது. இதுகுறித்து கஜ யாத்திரையின் நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், ஊட்டி அரசு கலைக்கல்லூரி பேராசிரியருமான ராமகிருஷ்ணன் கூறியதாவது:–

கடந்த 2012–ம் ஆண்டு நமது தேசிய பாரம்பரிய விலங்காக காட்டுயானை அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புதுடெல்லியில் காட்டுயானைகளை பாதுகாப்பது குறித்து கூட்டம் நடைபெற்றது. இதில் யானைகளை பாதுகாக்கும் நோக்கில் காட்டுயானைகள் உள்ள மாநிலங்களில் கஜ யாத்திரை நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் கடந்த 2–ந் தேதி கோவையில் கஜ யாத்திரையை வனத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதிக வனப்பகுதிகளை கொண்ட நீலகிரியில் இன்று(நேற்று) தொடங்கி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கஜ யாத்திரை 4 நாட்கள் நடக்கிறது.

காட்டுயானை வழித்தடங்கள் பசுமையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை(இன்று) முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகள் குறித்த புகைப்பட கண்காட்சி நடக்கிறது. திங்கட்கிழமை(நாளை) மாவனல்லா, கார்குடி உள்பட 7 கிராமங்களை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பள்ளி மாணவ–மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது. செவ்வாய்க்கிழமை(நாளை மறுநாள்) ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் யானைகளை பாதுகாப்பது, மனித–விலங்கு மோதல் குறித்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story