டாப்சிலிப், முதுமலையில் வளர்ப்பு யானைகள் புத்துணர்வு முகாம் தொடங்கியது


டாப்சிலிப், முதுமலையில் வளர்ப்பு யானைகள் புத்துணர்வு முகாம் தொடங்கியது
x
தினத்தந்தி 23 Feb 2019 10:45 PM GMT (Updated: 23 Feb 2019 9:29 PM GMT)

டாப்சிலிப், முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நேற்று தொடங்கியது.

மசினகுடி,

தமிழக அரசு சார்பில் கோவில்களில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்துணர்வு முகாமின்போது, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கும் முகாம் நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால் கடந்த ஆண்டு முதல் கோவில் யானைகளுக்கு தனியாகவும், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு தனியாகவும் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கோடை காலத்தில வனத்துறை வளர்ப்பு யானைகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்படுவதால், அப்போது அந்த யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது.

அதன்படி இந்த ஆண்டு வனத்துறை வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நேற்று தொடங் கியது. இதன் தொடக்க விழா முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்றது. இதையொட்டி முகாமில் உள்ள 15 வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. முன்னதாக அங்குள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதில் கிருஷ்ணா என்ற யானை துதிக்கையால் மணி அடித்தபடி 3 முறை கோவிலை சுற்றி வந்தது. பின்னர் மண்டியிட்டும், முன்னங்கால்களை உயர்த்தியும் விநாயகரை தரிசித்தது.

இதையடுத்து முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் மல்லேசப்பா புத்துணர்வு முகாமை தொடங்கி வைத்து, வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு உணவுகளை வழங்கினார். அனைத்து யானைகளுக்கும் அரிசி சாதம், ராகி, பாசிபயறு, கொள்ளு, தேங்காய், வெல்லம், கரும்பு, ஆப்பிள், மாதுளை, வாழைப்பழம், அன்னாச்சி பழம், தர்பூசணி, சத்து மாத்திரைகள், லேகியங்கள் உள்பட 20–க்கும் மேற்பட்ட வகை சிறப்பு உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் வழங்கப்பட்டன. முதுமலையில் மொத்தம் 24 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. எனவே தெப்பக்காட்டில் 15 யானைகளுக்கும், பேம்பெக்சில் 9 யானைகளுக்கும் புத்துணர்வு முகாம் தனித்தனியாக நடத்தப்படுகிறது.

இந்த புத்துணர்வு முகாம் குறித்து முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் மல்லேசப்பா கூறியதாவது:–

முதுமலை, ஆனைமலை மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. புத்துணர்வு முகாம் தொடங்கி உள்ளதால், யானைகளுக்கு எந்த பணிகளும் வழங்கப்படாது. முழு ஓய்வு அளிக்கப்படும். சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும், கூந்தபனை உள்ளிட்ட பசுந்தீவனங்களும் அளிக்கப்படும். இதற்காக ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால் யானைகளின் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாம் தொடக்க விழாவில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் தீபக் ஸ்ரீவத்சவா, துணை கள இயக்குனர்கள் செண்பிரியா, புஷ்பாகரன், அரசு தேயிலை தோட்ட கழக மேலாண்மை இயக்குனர் சீனிவாச ரெட்டி, வனச்சரகர்கள் தயாநந்தன், ராஜேந்திரன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண் டனர். விழா ஏற்பாடுகளை வனவர் முத்துராமலிங்கம் மற்றும் வனத்துறை ஊழியர்கள் செய்திருந்தனர்.

இதே போன்று கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த டாப்சிலிப் வனச்சரகத்தில் கோழிக் கமுத்தி பகுதியில் வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நேற்று தொடங்கியது. ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். யானைகளுக்கு கஸ்தூரி வாசு எம்.எல்.ஏ. சிறப்பு உணவுகளை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் கூறியதாவது:–

கோழிக்கமுத்தி யானைகள் முகாம் ஆங்கிலேயர் காலத்தில் 1920–ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வனப் பணிகளிலும், வனத்திற்குள் சவாரி மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று காட்டு யானைகளை அடக்குவது உள்ளிட்ட பணிகளிலும் யானைகள் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுகின்றன. ஆகவே இதுபோன்ற முகாம்கள் நடத்துவதால் அந்த யானைகளுக்கும் நல்ல ஓய்வு கிடைத்து புத்துணர்ச்சி ஏற்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:–

டாப்சிலிப் வனச்சரகத்திற்கு உட்பட்ட கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் 9 பெண் யானைகள் உள்பட மொத்தம் 25 யானைகள் உள்ளன. இதில் 5 கும்கி யானைகளும் அடங்கும். வரகளியாறு முகாமில் வைக்கப்பட்டுள்ள சின்னதம்பி யானைக்கு பாதுகாப்புக்காக பாரி, தமிழன், சிவகாமி, செல்வி, ராமு ஆகிய 5 யானைகள் அனுப்பப்பட்டு உள்ளன.

மேலும் ராஜபாளையத்தில் இருந்து கோர்ட்டு உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்டு, இங்கு ஒப்படைக் கப்பட்ட யானை ரோகிணியும் நாளை (இன்று) கோழிக்கமுத்தி முகாமிற்கு அழைத்து வரப்பட உள்ளது. சின்னதம்பி யானையுடன் சேர்த்து மொத்தம் 27 யானைகள் புத்துணர்வு முகாமில் பங்கேற்கின்றன.

அனைத்து யானைகளுக்கும் காலை, மாலை வழக்கமாக கொடுக்கப்படும் உணவுகளுடன், சத்தான தானியங்கள் அடங்கிய உணவுகளும் வழங்கப்படும். முகாம் நடைபெறும் நாட்களில் அவ்வப்போது கால்நடை மருத்துவர்களும் வந்து யானைகளை பரிசோதனை செய்ய உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விழாவில் வனச்சரகர்கள் காசிலிங்கம், நவீன்குமார், மணிகண்டன், வனவர்கள், வனத்துறை ஊழியர்கள் மற்றும் அ.தி.மு.க. ஆனைமலை ஒன்றிய செயலாளர் சுந்தரம், துணைச் செயலாளர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டாப்சிலிப்பில் வளர்க்கப்படும் 27 யானைகளும், முதுமலையில் வளர்க்கப்படும் 24 யானைகளும் என மொத்தம் 51 யானைகள் புத்துணர்வு முகாமில் பங்கேற்று உள்ளன. இந்த புத்துணர்வு முகாம் வருகிற ஏப்ரல் மாதம் 11–ந் தேதி நிறைவு பெறுகிறது.

டாப்சிலிப் கோழிக்கமுத்தி முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளில் 2 யானைகள் சுழற்சி முறையில் நாள்தோறும் டாப்சிலிப்பிற்கு அழைத்து வரப்படும். அங்கு காலை முதல் மாலை வரை அந்த யானை களை கொண்டு வனத்திற்குள் சவாரி நடத்தப்பட்டு வந்தது. இது போல முதுமலையிலும் வளர்ப்பு யானைகள் மூலம் யானை சவாரி நடைபெற்று வந்தது.

வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடப்பதால் டாப்சிலிப், முதுமலையில் 48 நாட்களுக்கு யானை சவாரி ரத்து செய்யப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story