தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் கொல்லத்தில் இருந்து கோவை, ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க நடவடிக்கை தேவை தென்னக ரெயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை


தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் கொல்லத்தில் இருந்து கோவை, ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க நடவடிக்கை தேவை தென்னக ரெயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 24 Feb 2019 4:52 AM IST (Updated: 24 Feb 2019 4:52 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் கொல்லத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி வழியாக கோவை, ராமேசுவரத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் 2–வது வாரத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வரும் பட்சத்தில் பொதுமக்கள் வசதிக்காக புதிய ரெயில்கள் ஏதும் இயக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய ரெயில்கள் இயக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பலன் கிடைப்பதோடு மத்திய அரசுக்கும் பொதுமக்களிடையே ஆதரவு கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

கொல்லத்தில் இருந்து விருதுநகர் வரையிலான ரெயில்பாதை மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக இருந்தபோது கோவை, ராமேசுவரம், நாகூர் ஆகிய ஊர்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அகல ரெயில்பாதை திட்டப்பணி தொடங்கப்பட்ட பின்னர் இந்த ரெயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டது.

தற்போது கொல்லம்–புனலூர் இடையே இருவழிப்பாதை திட்டப்பணி முடிந்து ரெயில் போக்குவரத்து தொடங்கி விட்டது. ஆனாலும் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எதுவும் இயக்கப்படுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

விருதுநகர் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள மக்களுக்கு வசதியாக கொல்லம்–விருதுநகர் இடையே தொலைதூர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை. தற்போது உள்ள நிலையில் சென்னையில் இருந்து செங்கோட்டை வரையிலான பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில், வாரம் மூன்று முறை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில், தாம்பரம்–செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலும் இதுவரை பலமுறை அறிவிக்கப்பட்டும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

எனவே கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி வழியாக கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டியது அவசியம் ஆகும்.

எனவே தென்னக ரெயில்வே நிர்வாகம் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே ரெயில்வே அமைச்சகத்தின் ஒப்புதலுடன் கொல்லத்தில் இருந்து கோவை, ராமேசுவரம், நாகூர் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்குவதுடன் பெங்களூருக்கும் புதியதாக எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலும் உடனடியாக இயக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும்.

இதேபோன்று மதுரையில் இருந்து சென்னைக்கு தேஜஸ் ரெயில் இயக்கப்படும் என 2 முறை அறிவிக்கப்பட்டும் நடைமுறைக்கு வர வில்லை. எனவே இந்த ரெயிலையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.


Next Story