மத்தியில் பா.ஜனதா தலைமையில் ஆட்சி அமைந்தால் இந்தியாவுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் திருமாவளவன் பேட்டி


மத்தியில் பா.ஜனதா தலைமையில் ஆட்சி அமைந்தால் இந்தியாவுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 24 Feb 2019 11:00 PM GMT (Updated: 24 Feb 2019 7:40 PM GMT)

மத்தியில் பா.ஜனதா தலைமையில் ஆட்சி அமைந்தால் இந்தியாவுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் என்று தஞ்சையில் திருமாவளவன் கூறினார்.

தஞ்சாவூர்,

மத்தியில் மீண்டும் பா.ஜனதா தலைமையிலான அரசு அமைந்தால் இந்தியாவுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் கம்யூனிஸ்டு கட்சிகள், தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள் இடையே உடன்பாடு உள்ளது. இதனால் இந்த தேர்தலில் இணைந்துள்ளோம். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

நாடாளுமன்ற தேர்தலில் 3-வது அணி உருவானாலும் அது வலிமை பெறாது. எத்தனை அணி வேண்டுமானாலும் உருவாகலாம். தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க.- அ.தி.மு.க. இடையே தான் உண்மையான போட்டி உள்ளது. தி.மு.க. தலைமையிலான அணி கொள்கை புரிதல் அணி. அ.தி.மு.க அணியில் முற்றிலும் முரண்பாடு உள்ள கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க உள்ளது.

பா.ம.க. அந்த அணியில் சேர்ந்ததும் அ.தி.மு.க அணியின் நன்மதிப்பு பாதிக்கப்பட்டு விட்டது. அந்த அணியில் பா.ஜனதா இடம் பெற்றுள்ளது. மத்திய அரசுக்கு எதிரான மனநிலை மக்களிடம் வலுவாக உள்ளதால் அ.தி.மு.க. மேலும் பலவீனத்தை அடைந்துள்ளது. அ.தி.மு.க. அதிக இடங்களில் போட்டியிட்டாலும், பா.ஜனதா தலைமையில் தான் அணி அமைப்பதை போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.

பா.ஜனதா ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒற்றை குறிக்கோள் அடிப்படையில் நாங்கள் உடன்பாடு அமைத்துள்ளோம். பழங்குடியின மக்கள் காடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்ற தீர்ப்பு வேதனைக்குரியது. இது அநீதி. இதை ஏற்க முடியாது. அவர்களை மலைப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல. மத்திய அரசு இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். தமிழக அரசும் இதில் விரைந்து செயல்பட வேண்டும். தே.மு.தி.க. எங்கள் அணிக்கு வருமா என்பதை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான் முடிவு செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story