மன்றாம்பாளையத்தில் தென்னை நார் மில்லில் தீ விபத்து - ரூ.40 லட்சம் பொருட்கள் நாசம்


மன்றாம்பாளையத்தில் தென்னை நார் மில்லில் தீ விபத்து - ரூ.40 லட்சம் பொருட்கள் நாசம்
x
தினத்தந்தி 24 Feb 2019 10:45 PM GMT (Updated: 24 Feb 2019 8:02 PM GMT)

நெகமம் அடுத்த மன்றாம்பாளையத்தில் தென்னை நார் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

நெகமம்,

வடசித்தூரில் இருந்து மன்றாம்பாளையம் செல்லும் ரோட்டில் மகேந்திரன் என்பவர் தென்னை நார் மில் நடத்தி வருகிறார். இங்கு உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தென்னைமட்டை விலைக்கு வாங்கி வந்து தண்ணீரில் நனைத்து எந்திரத்தில் போட்டு மட்டைகளை அறைத்து பின் வெயிலில் காயவைத்து அதை 30 கிலோ எடை கொண்ட மஞ்சி கட்டுகளாக கட்டி கேரள மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.மேலும் அதிலிருந்து வரும் மஞ்சி துகளை பித் கட்டியாக தயாரிக்கப்படுகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பணியாளர்கள் வேலைபார்த்து வந்தனர். பின்னர் மதியம் உணவு அருந்த அவர்கள் சென்றுள்ளனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு மின்மாற்றியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. அதில் இருந்து விழுந்த தீப்பொறிகள் அருகில் உள்ள புல் தரையில் பற்றியுள்ளது. தீ மளமளவென அருகில் இருந்த தென்னை நார் மில்லுக்கு பரவியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் இதுகுறித்து கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த கிணத்துக்கடவு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

இந்த விபத்தில் மில்லில் உள்ள மட்டைகள், மஞ்சி, பித் கட்டி மற்றும் எந்திரம் ஆகியவை முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் ரூ.40 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Next Story