மாவட்டத்தில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் 64 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் கலெக்டர் தகவல்


மாவட்டத்தில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் 64 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 25 Feb 2019 4:15 AM IST (Updated: 25 Feb 2019 3:42 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் மத்திய அரசு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 64 ஆயிரம் பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வினியோகம் செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்தார்.

நாமக்கல்,

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் படி சிறு, குறு விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில், 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் ஏராளமான சிறு, குறு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதைதொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக நேற்று ஒரு ஒன்றியத்துக்கு 50 விவசாயிகள் வீதம் 850 பேருக்கு ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான சான்றிதழை கலெக்டர் ஆசியா மரியம், பி.ஆர்.சுந்தரம் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.

பின்னர் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

இந்த திட்டம் கடந்த 12-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மாவட்டத்தில் தகுதியான சிறு, குறு விவசாயிகளின் பட்டியலை தயார் செய்து அனுப்பினோம். அந்த வகையில் மாவட்டத்தில் 64 ஆயிரம் விவசாயிகளுக்கு முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள ரூ.4 ஆயிரம் அடுத்தடுத்த கட்டங்களில் வழங்கப்படும். மேலும் விடுபட்ட விவசாயிகளும் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக சிறப்பு முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் பிரதமரின் நிகழ்ச்சியானது நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்திலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு பி.ஆர்.சுந்தரம் எம்.பி. தலைமை தாங்கினார். நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட தலைவர் டாக்டர் அகிலா வரவேற்று பேசினார். கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ., மாவட்ட வன அலுவலர் டாக்டர் காஞ்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்ட மோகனூர் வட்டாரத்தை சேர்ந்த 20 சிறு, குறு விவசாயிகளுக்கு சான்றிதழ்களை பி.ஆர்.சுந்தரம் எம்.பி. வழங்கினார். இதில் மோகனூர் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் கலைச்செல்வி, எருமப்பட்டி வட்டார தோட்டக்கலைதுறை உதவி இயக்குனர் புவனேஸ்வரி, கால்நடை உதவி மருத்துவர் காளிமுத்து உள்பட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய தோட்டக்கலை உதவி பேராசிரியர் சர்மிளா பாரதி நன்றி கூறினார். 

Next Story