தாளவாடி அருகே பாறையில் இருந்து தவறி விழுந்து பெண் யானை சாவு


தாளவாடி அருகே பாறையில் இருந்து தவறி விழுந்து பெண் யானை சாவு
x
தினத்தந்தி 25 Feb 2019 4:11 AM IST (Updated: 25 Feb 2019 4:11 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே பாறையில் இருந்து தவறி விழுந்து பெண் யானை இறந்தது.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், டி.என்.பாளையம் ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

தற்போது மழை பெய்யாததால் வனப்பகுதி முழுவதும் வறண்டு காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு உணவு, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. தீவனத்தையும், தண்ணீரையும் தேடி வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறுகின்றன. அவ்வாறு வரும் வனவிலங்குகள் வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டங்களில் புகுந்து பயிரை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் தாளவாடி கும்டாபுரம் அருகே உள்ள தமிழக–கர்நாடக மாநில எல்லை பகுதியில் உள்ள பாறை அருகே யானை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தாளவாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று யானையின் உடலை பார்வையிட்டனர்.

உணவு தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை கும்டாபுரம் அருகே உள்ள தமிழக–கர்நாடக மாநில எல்லை பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. அப்போது அங்குள்ள பாறை மீது ஏற முயன்றபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து கால்நடை டாக்டருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.


Next Story