மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வெற்றிபெற செய்தால் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துதரப்படும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு + "||" + If all the basic facilities will be done if the DMK succeeds in the assembly elections - Udhayanidhi Stalin Speech

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வெற்றிபெற செய்தால் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துதரப்படும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வெற்றிபெற செய்தால் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துதரப்படும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க.வை வெற்றிபெற செய்தால் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அணைக்கட்டு,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் 66-வது பிறந்தாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அணைக்கட்டை அடுத்த தார்வழி கிராமத்தில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்துக்கு வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். கிழக்கு ஒன்றிய பொருளாளர் குமாரபாண்டியன் வரவேற்றார். அவைத்தலைவர் வெங்கடேசன், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு 30 பேருக்கு சலவைபெட்டி, 10 பேருக்கு 3 சக்கர சைக்கிள், 7 பேருக்கு இருசக்கர சைக்கிள், 75 பேருக்கு தையல் எந்திரம், 200 பேருக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் உள்பட 425 பேருக்கு மொத்தம் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர்.

அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

கருணாநிதிக்கு நிழலாக இருந்தவர் துரைமுருகன். அவர் தற்போது எங்களுக்கு கருணாநிதியின் மறுஉருவமாக இருக்கிறார். தி.மு.க. சார்பில் 12,500 கிராமங்களில் ஊராட்சி சபைகூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அங்கெல்லாம் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க.வை வெற்றிபெறச்செய்தால் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். நந்தகுமார் எம்.எல்.ஏ.வை போன்று அனைவரும் செயல்பட்டால் கண்டிப்பாக 234 தொகுதிகளிலும் வெற்றிபெறலாம்.

வருகிற மே மாதம் நடைபெறஇருக்கிற நாடாளுமன்ற தேர்தலிலும், 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர்களை வெற்றிபெறச்செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

துரைமுருகன் பேசியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும். அதில் தி.மு.க. 18 தொகுதிகளில் வெற்றிபெற்றால் அ.தி.மு.க. ஆட்சியை கூண்டோடு வெளியேற்றிவிடலாம். நான் 11 முறை காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளேன். அதேபோன்று அணைக்கட்டு தொகுதி நிரந்தர எம்.எல்.ஏ. நந்தகுமார்தான்.

அவர் தொகுதிக்கு ஆற்றும் சேவை மெய்சிலிர்க்கவைக்கிறது. இந்த தொகுதி நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வந்தது. நந்தகுமார் வந்தபிறகு அனைத்து திட்டங்களும் கொண்டுவரப்படுகிறது. கலைஞர் ஆட்சியில் 100 நாள் வேலைதிட்ட தொழிலாளர்களுக்கு ரூ.200 கூலி வழங்கப்பட்டது. தற்போது ரூ.120 வரை மட்டுமே வழங்கப்படுகிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 365 நாட்களும் வேலை வழங்கப்படும். நான் அமைச்சராக இருந்தபோது 38 ஆயிரம்பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வாங்கிக்கொடுத்தேன். தற்போது பாதிபேருக்கு கூட ஓய்வூதியம் வரவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், பொய்யாமொழி, அவைத்தலைவர் முகமதுசகி, முன்னாள் ஒன்றிய செயலாளர் மு.பாபு, ஒன்றிய அவைத்தலைவர் ஆர்.சி.மணிமாறன், ஒன்றிய துணைசெயலாளர்கள் அசோகன், பி.ஆர்.ரவீந்திரன், சாந்திசங்கர், பேரூர் செயலாளர் ஏ.பாஸ்கரன், மாவட்ட பிரதிநிதிகள் கே.எஸ்.கணபதி, டி.ஏ.அஸ்லாம், எம்.நடராஜன், மாவட்ட பிரதிநிதி டி.கே.புண்ணியமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் டி.ஏ.சேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சிவப்பிரகாசம், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் திருக் குமரன் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த உதயநிதி ஸ்டாலின் முன்னதாக வேலூரில் அவர் கதாநாயகனாக நடித்த ‘கண்ணே கலைமானே’ படம் ஓடும் வீனஸ் சினிமா தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை சிறிது நேரம் பார்த்தார். அவருடன் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், ஈஸ்வரப்பன் ஆகியோரும் படம் பார்த்தனர்.

பின்னர் தியேட்டரிலேயே உதயநிதி ஸ்டாலின் கேக் வெட்டி கொண்டாடினார்.