சுசீந்திரம் தபால்நிலையத்தில் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


சுசீந்திரம் தபால்நிலையத்தில் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 26 Feb 2019 4:30 AM IST (Updated: 25 Feb 2019 8:21 PM IST)
t-max-icont-min-icon

சுசீந்திரம் தபால்நிலையத்தில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலகிருஷ்ணன்புதூர்,

சுசீந்திரம் மெயின் ரோட்டில் தாணுமாலயசாமி கோவிலுக்கு செல்லும் அலங்கார நுழைவாயில் அருகே சுசீந்திரம் தபால்நிலையம் உள்ளது.  கடந்த சனிக்கிழமை பணிகள் முடிந்தபின்னர் ஊழியர்கள் தபால் நிலையத்தை பூட்டிவிட்டு சென்றனர்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. அதைதொடர்ந்து நேற்று காலையில் தபால் நிலையத்தை திறப்பதற்காக ஊழியர்கள் வந்தனர்.

அப்போது தபால் நிலையத்தின் முன்புறம் மற்றும் பின்புறம் உள்ள கதவுகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி, உயர் அதிகாரிகளுக்கும், சுசீந்திரம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நள்ளிரவில் தபால் நிலையத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த லாக்கரை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து இருந்தது தெரியவந்தது. ஆனால், லாக்கரில் பணம் வைக்காததால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர், அங்கிருந்த மேஜையில் வைக்கப்பட்டு இருந்த அலுவலக பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் 2 செல்போன்களை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

மேலும், மோப்பநாய் ஓரா வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 கியாஸ் வெல்டிங்கை பயன்படுத்தி உள்ளதால் மர்ம நபர்கள் வடநாட்டு கொள்ளையர்களாக இருக்கலாம் ? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

Next Story