கும்மிடிப்பூண்டி மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை கணக்கில் வராத ரூ.46 ஆயிரம் சிக்கியது
கும்மிடிப்பூண்டி மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 8 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.46 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்திற்கு நேற்று பகல் 12.30 மணியளவில் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் துணை சூப்பிரண்டு இளங்கோ தலைமையில் போலீசார் நுழைந்தனர்.
அப்போது மின் கட்டணம் செலுத்தும் கவுண்ட்டர் அறைக்குள் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் 3 பேரை மடக்கிப்பிடித்து அவர்களிடம் இருந்து ரூ.30,550 பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார், மின் ஊழியர்கள் வைத்திருந்த ரூ.15,977 பறிமுதல் செய்யப்பட்டது. ஆக மொத்தம் துணை மின்நிலையத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.46 ஆயிரத்து 527–யை பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து 8 மணி நேரம் நடந்த இந்த சோதனை இரவு 8:30 மணிக்கு நிறைவடைந்தது.
இதில் குருவியகரத்தை சேர்ந்த சங்கர் என்ற நிழக்கிழார் தான் வங்கிக்கு செலுத்த வைத்திருந்த ரூ.30 ஆயிரத்தை பறித்துக்கொண்ட அதிகாரிகள் தன்னிடம் ரூ.21 ஆயிரத்து 500 மட்டுமே பெற்றுக்கொண்டதாக கணக்கு காண்பித்து இருப்பதாக கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.
இதற்கிடையே லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து வைத்திருந்த பொதுமக்களின் உறவினர்கள் நேற்று இரவு மின்சார வாரியத்துக்கு வந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது பணத்துக்கான உரிய கணக்கை தெரிவித்து விட்டு அதற்குரிய அலுவலகத்தில் இருந்து பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என போலீசார் சமாதானம் பேசி பொதுமக்களை அனுப்பி வைத்தனர்.