புஞ்சைபுளியம்பட்டி குப்பைக்கிடங்கில் திடீர் தீ விபத்து
புஞ்சைபுளியம்பட்டி குப்பைக்கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
புஞ்சைபுளியம்பட்டி,
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு நம்பியூர் ரோட்டில் உள்ளது. நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகள் இங்கு வந்து கொட்டப்படுகிறது. இந்த குப்பை கிடங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் திடீர் என தீ பிடித்து பரவியது. மளமளவென பரவிய தீ தென்னை மர உயரத்திற்கு கொளுந்து விட்டு எரிந்தது.
இதன் காரணமாக அருகில் உள்ள தோட்டத்து சாலை குடியிருப்பு பகுதியில் புகைமூட்டமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் புகை மூட்டத்தினால் பாதிக்கப்பட்டனர். உடனே இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து நகராட்சி பணியாளர்களும் அங்கு விரைந்தனர். அவர்களுடன் இணைந்து தீயை அணைக்க போராடினார்கள். சுமார் 7 மணி நேர போராட்டத்துக்கு பிறகு நேற்று காலை 7 மணி அளவில் தீயை அணைத்தனர். எனினும் தொடர்ந்து அங்கு கரும்புகை வந்து கொண்டு இருக்கிறது.
தீ விபத்து குறித்து அப்பகுதியினர் கூறுகையில், ‘கடந்த 2 நாட்களுக்கு முன்பு புளியம்பட்டி–மேட்டுப்பாளையம் ரோட்டில் பஞ்சுபேல் ஏற்றி வந்த லாரி மின் கம்பி உரசியதில் தீயில் கருகி நாசமானது. இதில் தீயில் கருகிய பஞ்சுகளை எடுத்து சென்று நள்ளிரவில் குப்பை குடோனில் கொட்டினர். அதில் பஞ்சில் உள்ள அணையாத தீயே குப்பை கிடங்கு தீ விபத்துக்கு காரணம்’ என கூறுகின்றனர்.