பரமக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் கல்லூரி கல்வி இணை இயக்குனர் பேச்சுவார்த்தை


பரமக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் கல்லூரி கல்வி இணை இயக்குனர் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 26 Feb 2019 4:15 AM IST (Updated: 26 Feb 2019 1:26 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றிய 2 பேராசிரியர்கள் இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் கல்லூரி கல்வி இணை இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பரமக்குடி.

தமிழகத்தில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பின் சார்பில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பலரை அரசு கைது செய்தது. இதில் கைது செய்யப்பட்ட 27 கல்லூரி பேராசிரியர்களில் 18 பேரை பல்வேறு கல்லூரிகளுக்கு பணியிட மாறுதல் செய்தனர். இதில் பரமக்குடி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் சிவக்குமார், ரமேஷ் ஆகியோரும் இடமாறுதல் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரது பணியிட மாறுதலை ரத்து செய்து மீண்டும் பரமக்குடி கல்லூரியில் பணியமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவ–மாணவிகள் கடந்த 21, 22–ந்தேதிகளில் வகுப்புக்களை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் 25–ந்தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்தது.

இந்த நிலையில் நேற்று காலை கல்லூரி மாணவ–மாணவிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது கல்லூரிக்கு வருகை தந்திருந்த மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன் மாணவ–மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட 2 பேராசிரியர்களை மீண்டும் பரமக்குடி கல்லூரியில் பணியமர்த்த தமிழக அமைச்சர், கல்லூரி கல்வி இயக்குனர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

மேலும் கல்லூரி மாணவ– மாணவிகள் 20 பேரிடம் பெயர், படிக்கும் பாடப்பிரிவு குறிப்பிட்டு கல்லூரியில் போராட்டத்திற்கான காரணம், அதனை எவ்வாறு நிவர்த்தி செய்ய வேண்டும். தங்களது போராட்டத்திற்கு வெளிநபர்கள் காரணமா என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து கல்லூரி இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் திறக்கப்படும் என கல்லூரி கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன் தெரிவித்தார். பேச்சுவார்த்தையின் போது கல்லூரி முதல்வர் பூரணசந்திரன் உடனிருந்தார்.


Next Story