நாய் குறுக்கே ஓடியதால் அரசு பஸ் கவிழ்ந்தது; 22 மாணவர்கள் உள்பட 28 பேர் காயம்
அத்தாணி அருகே நாய் குறுக்கே ஓடியதால் அரசு பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 22 மாணவர்கள் உள்பட 28 பேர் காயம் அடைந்தார்கள்.
அந்தியூர்,
கோபியில் இருந்து அந்தியூர் அருகே உள்ள அத்தாணி நோக்கி 45–க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிய அரசு டவுன் பஸ் ஒன்று வந்துகொண்டு இருந்தது. பஸ்சை கணபதிபாளையத்தை சேர்ந்த சரவணன் (வயது 47) என்பவர் ஓட்டினார். பஸ் அத்தாணி அருகே உள்ள கருப்பகவுண்டன்புதூர் பகுதியில் வந்தபோது ரோட்டின் குறுக்கே நாய் ஒன்று ஓடியது. இதனால் டிரைவர் பஸ்சை திருப்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் தோண்டப்பட்டிருந்த குழிக்குள் பஸ்சின் டயர் சிக்கியதால் கவிழ்ந்தது.
அதனால் பஸ்சுக்குள் இருந்த மாணவ–மாணவிகள் மற்றும் பயணிகள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து பஸ்சுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இதில் 22 மாணவர்கள் உள்பட 28 பேருக்கு காயம் ஏற்பட்டு இருந்தது.
இதனால் அவர்கள், காயம் ஏற்பட்ட அனைவரும், 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் மூலம் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து 17 பேர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் விபத்தில் காயம் ஏற்பட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.