திருப்பூரில் அதிகாலையில் சம்பவம்: பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ரூ.1 கோடி பொருட்கள் எரிந்து நாசம்


திருப்பூரில் அதிகாலையில் சம்பவம்: பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ரூ.1 கோடி பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 27 Feb 2019 4:15 AM IST (Updated: 27 Feb 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் அதிகாலையில் பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் எந்திரங்கள், பனியன், உள்ளிட்ட ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

அனுப்பர்பாளையம்,

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் அதுல் ஆ‌ஷர் (வயது 56). இவர் திருப்பூர் அவினாசி ரோடு பெரியார்காலனியை அடுத்த டி.டி.பி. மில் ரோட்டில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் 15 வேலம்பாளையத்தை அடுத்த மகாலட்சுமிநகர் விரிவு அண்ணா வீதியில் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் வழக்கம் போல பனியன் நிறுவனத்தை பூட்டி விட்டு ஊழியர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு பனியன் நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது. சிறிது நேரத்தில் பனியன் நிறுவனத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த நிறுவனத்தின் காவலாளி இதுகுறித்து உரிமையாளருக்கும், திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், நாலாபுறமும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் கட்டிடத்தின் உள்ளே பனியன் துணிகள் அதிக அளவில் இருந்ததால் தீ மேலும் மேலும் கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் தீயை உடனடியாக அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது. முடிவில் தீயணைப்பு துறையினர் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் நிறுவனத்தில் இருந்த தையல் எந்திரங்கள், பனியன் ஆடைகள் உள்ளிட்ட துணிகள் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை.

இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் அதிகாலையில் பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story