தி.மு.க. தென் மண்டல மாநாடு 40 நாடாளுமன்ற தொகுதி வெற்றிக்கு வழிவகுக்கும் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. நம்பிக்கை
விருதுநகரில் மார்ச் 6–ந்தேதி நடைபெறும் திமுக தென் மண்டல மாநாடு 40 நாடாளுமன்ற தொகுதி வெற்றிக்கும், 21 சட்டமன்ற தொகுதி வெற்றிக்கும் வழிவகுக்கும் என சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விருதுநகர்,
விருதுநகரில் மார்ச் 6–ந்தேதி நடைபெற உள்ள தென் மண்டல தி.மு.க. மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள தனியார் திருமண அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:–
நாம் தற்போது முக்கியமான கால கட்டத்தில் உள்ளோம். கடந்த 7½ ஆண்டுகளாக எதிர் கட்சியாகவே இருந்துவிட்டோம். இன்னும் எத்தனை காலம்தான் எதிர்கட்சியாகவே இருப்பது. விருதுநகரில் கடந்த 2004–ம் ஆண்டு நடைபெற்ற தி.மு.க. மாநாட்டையொட்டி ஒட்டி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. அதே போன்று தற்போது நடைபெற உள்ள தி.மு.க. தென் மண்டல மாநாட்டினையொட்டி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். இந்த தென் மண்டல மாநாடு இத்தேர்தல் வெற்றிக்கு வழிவகுக்கும்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையுடன் நம்மிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளார். 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறும் போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் யாரை சொல்லுகிறாரோ அவர்தான் பிரதமராகும் வாய்ப்பு ஏற்படும். 21 சட்டமன்ற தொகுதிகளில் நாம் வெற்றிபெறும் போது நமக்கு பெரும்பான்மை கிடைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சராக பொறுப்பேற்பார். அடுத்த சட்டமன்ற தேர்தல் வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. அடுத்த 20 ஆண்டுகளுக்கு நாம் தான் ஆட்சி அதிகாரத்தில் இருப்போம். மற்றவர்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள்.
தென் மண்டல தி.மு.க. மாநாடு விருதுநகர் சாத்தூர் இடையே ஆர்.ஆர்.நகர் அருகில் நடைபெற உள்ளது. 20 ஏக்கர் நிலம் மாநாடு நடைபெறுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 65 ஏக்கர் வாகனங்கள் நிறுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டின் முகப்பு 500 அடி அகலம் கொண்டது. மேடை 60 அடி நீளம் 60 அடி அகலம் கொண்டது. வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் 3 ஆயிரம் மின் விளக்குகள் உள்பட மொத்தம் 5 ஆயிரம் மின் விளக்குகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு 7 ஆயிரம் கொடிகள் பறக்க விடப்படும்.
இம்மாநாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 1 லட்சம் பேரை அழைத்து வர வேண்டியது கட்சி நிர்வாகிகள் பொறுப்பாகும். மற்ற தென் மாவட்டங்களில் இருந்து 1 லட்சம் பேருக்கு மேல் வர வாய்ப்புள்ளது. ஆக மொத்தம் 2 லட்சம் பேருக்கு மேல் இம்மாநாட்டில் கலந்து கொள்வார்கள். இம்மாநாட்டில் கலந்துகொள்ள வரும் பொதுமக்கள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை பார்ப்பதோடு அவரது பேச்சை கேட்டால்தான் அவர்களுக்கு பிரமிப்பு ஏற்பட்டு நமக்கு ஆதரவு தரும் வாய்ப்பு ஏற்படும்.
எனவே இம்மாவட்டத்தில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் மாநாடு 4 மணிக்கு தொடங்கும் நிலையில் 2½ மணி அளவிலேயே மாநாட்டு திடலில் வந்து அமர வேண்டும். மாநாடு 7½ மணியளவில் முடிந்துவிடும். ஏனெனில் நீங்கள் அழைத்துவந்த பொதுமக்கள் பத்திரமாக இரவு 9½ மணிக்குள் தங்கள் ஊர் போய் சேரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டை வெற்றிபெற செய்ய வேண்டியது மாவட்டத்திலுள்ள நகர, ஒன்றிய, பேரூர் கழக மற்றும் பிற சார்பு அணிகளின் நிர்வாகிகள் பொறுப்பாகும். இது வரை இல்லாத அளவுக்கு 3 ஆயிரத்து 500 வாகனங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே நமக்கு வாழ்வு கிடைக்க மக்களின் வாழ்வாதாரம் பெருக நாம் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.