சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் காதல் மனைவியை மாட்டிவிட முயன்ற கணவர் கைது


சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் காதல் மனைவியை மாட்டிவிட முயன்ற கணவர் கைது
x
தினத்தந்தி 27 Feb 2019 4:50 AM IST (Updated: 27 Feb 2019 4:50 AM IST)
t-max-icont-min-icon

சென்டிரல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில் தனது காதல் மனைவியை மாட்டி விட முயன்ற ஆசாமி கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 5.40 மணிக்கு மர்ம நபர் செல்போனில் தொடர்பு கொண்டார். அதில் அவர், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு முன்னி என்ற பெண் வெடிகுண்டு வைத்ததாக தகவல் தெரிவித்துவிட்டு செல்போனை அணைத்து விட்டார்.

உடனே கண்காணிப்பு அறையில் இருந்த போலீசார், சென்டிரல் ரெயில்வே போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். உடனே ரெயில்வே போலீசார் சென்டிரல் ரெயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த தீவிர சோதனையில் வெடிகுண்டு வைத்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் போலீசாரை திசைதிருப்பும் நோக்கில் யாரோ தவறான செய்தியை அளித்துள்ளனர் என்றும் போலீசாருக்கு தெரியவந்தது.

மேலும் இந்த வதந்தியை பரப்பிய மர்ம ஆசாமி யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். கண்காணிப்பு அறைக்கு அந்த மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணைக் கொண்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபர் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சரவணன் (வயது 37) என்று தெரியவந்தது.

தேனாம்பேட்டை போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் தான் முன்னி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் தங்களுக்குள் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே தன் காதல் மனைவியை போலீசில் மாட்டி விடுவதற்காக வெடிகுண்டு மிரட்டல் விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் சென்டிரல் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story