பா.ம.க.வில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித் அ.ம.மு.க.வில் சேர்ந்தார்


பா.ம.க.வில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித் அ.ம.மு.க.வில் சேர்ந்தார்
x
தினத்தந்தி 28 Feb 2019 5:00 AM IST (Updated: 28 Feb 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

பா.ம.க.வில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித் அ.ம.மு.க.வில் சேர்ந்தார்.

புதுச்சேரி,

கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் நடிகர் ரஞ்சித் பா.ம.க.வில் சேர்ந்தார். இதையொட்டி கட்சியில் அவருக்கு துணைத்தலைவர் பதவி அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர்ந்தது. இதை கண்டித்து கட்சியில் இருந்து நடிகர் ரஞ்சித் விலகுவதாக தெரிவித்தார்.

இந்தநிலையில் புதுவையில் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த டி.டி.வி. தினகரனை சந்தித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் நடிகர் ரஞ்சித் சேர்ந்தார். அப்போது கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, புதுவை மாநில செயலாளர் வேல்முருகன், அவைத்தலைவர் சுத்துக்கேணி பாஸ்கரன், நிர்வாகிகள் செந்தில்முருகன், எஸ்.டி.சேகர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்ந்து நடிகர் ரஞ்சித் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாற்றம், முன்னேற்றம் என்று கூறிக்கொண்டு தமிழக மக்களை சிலர் ஏமாற்றி வருகின்றனர். தற்போது தன்மானத்தை விட்டு ஒருசிலர் கூட்டணி சேருகின்றனர். ஆளும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து மக்களை அடகு வைக்கிறார்கள்.

நான் தமிழக மக்களின் நலனை கருத்தில்கொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்து உள்ளேன். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் வெற்றிபெறுவதற்காக பிரசாரம் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து டி.டி.வி. தினகரன் கூறியதாவது:-

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 38 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எங்கள் கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஏற்கனவே ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு தொகுதிக்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. புதுவை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும். சிறிய கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேசப்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறக்கக்கூடாது என்று சொன்னவர்களிடம் எல்லாம் தமிழக ஆட்சியாளர்கள் கூட்டணி அமைத்து வருகிறார்கள். அவர்களை மக்கள் அடையாளம் காண்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story