மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமாக எவ்வளவு சொத்துகள் உள்ளன? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி


மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமாக எவ்வளவு சொத்துகள் உள்ளன? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 28 Feb 2019 4:58 AM IST (Updated: 28 Feb 2019 4:58 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமாக எவ்வளவு சொத்துகள் உள்ளன? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

மதுரை,

சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ஆகியவற்றுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துகள் மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் எதிரில் உள்ளது. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சொத்துகள் அறநிலையத்துறை ஆணையர் அனுமதியின்றி விற்கப்பட்டுள்ளது.

இந்த சொத்துகளை மீட்கக்கோரி மதுரை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. அதன்படி விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. இன்னும் சொத்துகள் மீட்கப்படவில்லை. எனவே மதுரை கலெக்டர் தலைமையில் குழு அமைத்து, மேற்கண்ட நிலங்களை மீட்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், கோவில் சொத்து விவரம் குறித்து நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் வருமாறு:-

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்துகள் எவ்வளவு உள்ளன? அவற்றில் அசையா சொத்துகள் மற்றும் அசையும் சொத்துகள் எவ்வளவு? கோவிலுக்கு கட்டளைதாரர்கள், நன்கொடையாளர்கள் வழங்கிய சொத்துகள் எவ்வளவு? அவை தற்போது யார் கட்டுப்பாட்டில் உள்ளன? மீனாட்சி அம்மன் கோவில் சொத்துகளை ஆக்கிரமித்துள்ளவர்கள் யார்-யார்? என்ற கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மாட்டுத்தாவணி அருகில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வழங்கிய சூறாவளி சுப்பையரின் உறவினர்கள் மார்ச் மாதம் 13-ந்தேதி ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை மீட்கக்கோரிய வழக்கு விசாரணையின்போது, அந்த கோவிலின் சொத்துகள் எவ்வளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன, ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? சொத்து வருவாய் எவ்வளவு? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் “கோவில் சொத்துகளை மீட்க வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாக அதிகாரிகள் ஒத்துழைக்க மறுத்தால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும்“ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 13-ந்தேதி ஒத்திவைத்தனர்.


Next Story