தீ விபத்து எதிரொலி: மீனாட்சி அம்மன் கோவிலில் தீயணைப்பு நிலையம் திறப்பு


தீ விபத்து எதிரொலி: மீனாட்சி அம்மன் கோவிலில் தீயணைப்பு நிலையம் திறப்பு
x
தினத்தந்தி 28 Feb 2019 5:24 AM IST (Updated: 28 Feb 2019 5:24 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து அங்கு தீயணைப்பு நிலையம் நேற்று திறக்கப்பட்டது.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுவாமி சன்னதி செல்லும் வழியில் உள்ள வீரவசந்தராயர் மண்டப பகுதி முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகள் தீயில் கருகின. அப்போது கோவில் பகுதியில் நிரந்தர தீயணைப்பு நிலையம் இருந்தால் இந்த சேதத்தை தவிர்த்து இருக்கலாம் என்று பல்வேறு அமைப்பினர் கருத்து தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தனியாக தீயணைப்பு நிலையம் உருவாக்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக சட்ட சபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் புதிதாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சேலம் உள்ளிட்ட 3 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக தீயணைப்பு துறை இயக்குனர் மகேந்திரன், துணை இயக்குனர் சரவணக்குமார், மதுரை மாவட்ட தீயணைப்பு அதிகாரி கல்யாணகுமார் ஆகியோர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கோவிலுக்கு அருகே உள்ள பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைத்தால் எளிதில் கோவிலுக்குள் சென்று வரமுடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மாநகராட்சியிடம் கேட்ட போது, அந்த இடம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் வருவதாக தெரிவித்து இடம் வழங்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் கோவில் நிர்வாகத்திடம் இடம் குறித்து கேட்ட போது அவர்கள் தங்களிடம் கோவில் பகுதியில் இடம் எதுவும் இல்லை என்று கூறி விட்டனர்.

தற்காலிக ஏற்பாடாக தீயணைப்பு வாகனங்கள் மேற்கு சித்திரை வீதிகளில் வெட்ட வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் பிளாட்பாரங்களில் உட்காரும் நிலை ஏற்பட்டது. இது நாள் வரை தீயணைப்பு அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், கோவில் நிர்வாகம் என பல நிர்வாகத்திடம் தீயணைப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக நிரந்தர இடத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தநிலையில் சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலையத்தை நேற்று திறந்து வைத்தார். அதற்காக கோவில் நிர்வாகம் மேற்கு சித்திரை வீதியில் உள்ள காலணி பாதுகாக்கும் இடத்தின் அருகே கார் நிறுத்தும் இடத்தை தற்காலிகமாக தீயணைப்பு துறையினருக்கு வழங்கி உள்ளது. அந்த கார் நிறுத்துமிடத்தில் இருந்து நேற்று முதல் தற்காலிக தீயணைப்பு நிலையம் செயல்பட தொடங்கியது.

இந்த நிலையத்திற்கு தேவையான அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் ஓரிரு நாட்களில் நியமிக்கப்பட உள்ளதாக தீயணைப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தீயணைப்பு நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் அமைத்தால் தான் அங்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வைத்து பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வசதியாக இருக்கும். எனவே அரசு விரைந்து செயல்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு நிரந்தர இடம் மற்றும் அலுவலகம் அமைப்பதற்கான கட்டிடம் போன்றவற்றை உருவாக்கி தரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story